திராவிட மாடல் என்ற காலாவதியான கொள்கையை புதுப்பிக்கும் முயற்சி என்பது ஒரே பாரதம் ஒரே இந்தியா கருத்துக்கு எதிரானதாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்த கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாக ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த ஆளுநர் ரவியிடம் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர்,
“2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் நான் முதல்முறையாக உரையாற்றுவதற்கு முன்பு சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைக்க மாட்டோம் என்று என்னிடம் கூறப்பட்டது. ஆளுநர் வரும்போதும் சட்டமன்றத்திலிருந்து புறப்படும் போதும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
இருப்பினும் நான் சட்டமன்றத்தில் நுழைந்தபோது அவர்கள் தொடக்கத்தில் தேசிய கீதத்தை இசைக்கவில்லை. ஆனால் நான் புறப்படும் நேரத்தில் தேசிய கீதத்தை இசைத்தார்கள்.
இந்தமுறை சபாநாயகர் என்னை அழைக்க வந்தபோது முறைப்படி அவரிடம் கோரிக்கை வைத்தேன். நாடாளுமன்றத்திலும், அனைத்து சட்டமன்றங்களிலும் தேசிய கீதம் மதிக்கப்படுகிறது. அவரிடம் வாய்மொழியாக எனது கோரிக்கையை வைத்த பின்பு கடிதம் அனுப்புவதாக கூறினேன். சபாநாயகருக்கும் முதல்வருக்கும் கடிதம் எழுதினேன். ஆனால் அவர்கள் நான் சட்டமன்றத்தில் நுழையும் போது தேசிய கீதம் இசைக்கவில்லை.
அரசு தயாரிக்கும் ஆளுநர் உரையானது அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்களாக இருக்க வேண்டும். ஆளுநர் அதனை படிக்க வேண்டும். என்னிடம் கொடுக்கப்பட்ட உரை கொள்கைகளோ திட்டங்களோ அல்ல பிரச்சாரமாக இருந்தது. அவை தவறானவை மற்றும் பொய்யானவை.
சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை தமிழகம் அமைதியின் புகலிடம் என்றார்கள். நான் சில உதாரணங்களை மேற்கோள் காட்டினேன். தமிழகத்தில் பயங்கரவாத அமைப்பான பி.எப்.ஐ தடை செய்யப்பட்ட மறுநாள் முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கோயம்புத்தூரில் ஒரு கோவில் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலையில் 5000 பேர் சேர்ந்து பள்ளிக்கூடத்தை சூறையாடியதை குறிப்பிட்டேன். அதற்கான வீடியோக்கள் உள்ளன. இந்த சம்பவம் காவல்துறை பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே நடைபெற்றது.
2022-ஆம் ஆண்டு நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடத்துவதாக 8 தீக்ஷூதர்கள் மீது பழி வாங்கும் நோக்கில் சமூக நலத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். சிதம்பரம் கோவிலில் அதுபோன்ற குழந்தை திருமணங்கள் நடைபெறவில்லை. குழந்தைகளின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சில குழந்தைகள் மன வேதனை அடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு நான் கடிதம் எழுதினேன்.
சட்டமன்றம் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக திமுக பொதுக்கூட்டத்தில் சீருடையில் இருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவரிடம் திமுக பிரமுகர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். வழக்கை வாபஸ் வாங்க அவரை கட்டாயப்படுத்தினார்கள்.
சமீபத்தில் மணல் மாஃபியா கும்பல் கிராம நிர்வாக அலுவலரை அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து வெட்டிக்கொன்றது. இதுபோன்று குற்றச்சம்பவங்கள் நடக்கும்போது நான் அரசை பாராட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
திராவிட மாடல் ஆட்சியை நான் பாராட்டி ஆதரித்து பேச வேண்டும் என்று விரும்பினர்.
முதலாவதாக அதுபோன்ற ஆட்சி முறை எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் முழக்கம் மட்டுமே. காலாவதியான கொள்கையை புதுப்பிக்கும் முயற்சி என்பது ஒரே பாரதம் ஒரே இந்தியா கருத்துக்கு எதிரானதாகும்.
இது மொழி சார்ந்த இனவெறியை நாடு முழுவதும் வேகமாக செயல்படுத்தும் ஒரு கருத்தியலாகும். இதனால் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் மற்றும் வரலாறுகள் சிறுமைப்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் உள்ள எந்த மொழிகளுக்கும் தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படுவதில்லை. பட்ஜெட் உரையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் 3.25 லட்சம் புத்தகங்களுடன் கலைஞர் நூலகம் அமைக்கப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி பிரிவினைவாத உணர்வை வளர்ப்பதாகும். நான் அதனை ஆதரித்து சட்டமன்ற உரையில் வாசிக்க மாட்டேன் என்று சொன்னேன். என்னுடைய உரைக்கு பிறகு சபாநாயகர் தமிழ் உரையை வாசித்தார். நான் காத்திருந்தேன்.
ஆனால் சட்டமன்ற விதிமுறைகளுக்கு எதிராக முதல்வர் சபாநாயருடன் இணைந்து கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி என்னை தர்மசங்கடத்திற்கு ஆழ்த்த நினைத்தார். அதற்கு நான் அனுமதிக்கவில்லை. அதனால் நான் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
செல்வம்
எதிர்சேவை: கள்ளழகரை வரவேற்ற மக்கள்
அதிபர் மாளிகை தாக்குதல்: புதினை கொல்ல உக்ரைன் முயற்சி!