தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த முதல் ஆளுநராக ஆர்.என்.ரவி இடம்பெற்றுள்ளார்.
நடப்பாண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று (பிப்ரவரி 12) காலை தொடங்கியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது.
ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனையடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநரை வரவேற்று பேரவைக்குள் அழைத்து சென்றார்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் தமிழில் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி ஆளுநர் ரவி தனது உரையை தொடங்கினார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்த அவர், “அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால் அது இங்கு நிராகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் தற்போது இசைக்கப்பட்டு வரும் நிலையில் ஆளுநரின் கருத்தால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அத்துடன் அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்து தனது இருக்கையில் அமர்ந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பது தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை.
சமீபத்தில் உரையை முழுமையாக படிக்காமல் கேரளா ஆளுநர் புறக்கணித்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் அது நடந்தேறியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து அதிரடி மாற்றம் : எந்த சாலையில் செல்ல வேண்டும்?
ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது ஏன்? : கேப்டன் உதய் விளக்கம்!