அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமா? : அண்ணாமலை பேட்டி!
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்று நாங்கள் நம்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில மகளிர் அணித் தலைவி உமா ரவி ஆகியோர் இன்று (மே 21) ஆளுநர் ஆர்.என். ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினர்.
அப்போது, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரு மனுக்களை அளித்துள்ளனர்.
20 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் கள்ளச் சாராயம் காரணமாக 22 உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த, சாராய வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்து கொண்டிருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானைப் பதவி நீக்கம் செய்யும்படி முதலமைச்சரை வலியுறுத்தக் கோரி, பாஜக சார்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.
கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், தன் கடமையிலிருந்து தவறியது மற்றும் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்று, பண மோசடி செய்த வழக்கில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை எதிர்கொள்வது ஆகிய காரணங்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியையும் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தக் கோரி கேட்டுக் கொண்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.
ஆளுநரைச் சந்தித்தது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இன்னும் 15 நாட்களில், டாஸ்மாக்கை குறைத்து அதே வருமானத்தை எப்படி ஈட்டுவது என முதல்வருக்கு ஒரு வெள்ளை அறிக்கை கொடுப்போம் என ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம்” என்றார்.
மேலும் அவர், “அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படும் போது, அதைக் காக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது. ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் நாங்கள் நம்புகிறோம்.
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய அல்லது செந்தில் பாலாஜி மீதான விசாரணை முடியும் வரை அவரை பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும் என முதல்வரிடம் பரிந்துரைக்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது.
முதல்வரின் கீழ் உள்ள காவல்துறை, அவரின் கீழ் உள்ள அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவரை எப்படி நேர்மையாக விசாரணை செய்யும். செந்தில் பாலாஜி மீது நேர்மையான விசாரணைக்கு வாய்ப்பே இல்லை. எனவே ஆளுநரிடம் கோரிக்கை மனுவை வழங்கியிருக்கிறோம்” என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் கள் விற்பனைக்கு பாஜக உறுதுணையாக இருக்கும். தென்னை மற்றும் பனைமர கள் ஊக்குவிப்பதற்கு பாஜக உறுதுணையாக இருக்கும் எனவும் கூறினார் அண்ணாமலை.
பிரியா
ஆதி புருஷ்: அப்டேட் வெளியிட்ட படக்குழு!