இலாகா மாற்றம் குறித்த தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கையால் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடமும் பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டது.
இதுதொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த நிலையில், அதனை ஏற்க மறுத்து, சில விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் இன்று (ஜூன் 16) கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதனை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும். அமைச்சர்கள் யார் யார்? அவர்களுக்கு என்னென்ன துறைகள்? என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு.
இதில் ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்கிற அய்யம் எழுகிறது.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
“எடப்பாடி நீதிமன்ற படியேற தயாராக வேண்டும்”: ஆர்.எஸ்.பாரதி
இலாகா மாற்றம்: ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!