கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூலை 12) ஒப்புதல் அளித்துள்ளார்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்ட நிலையில், 65 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து கள்ளச்சாராயத்தை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக, தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தில் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து ஆளுநரின் ஒப்பதலுக்காக மசோதா அனுப்பப்பட்ட நிலையில், இரண்டே வாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக ஆளுநர் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தமிழக ஆளுநர்தான் தீர்வுகாண வேண்டும் என்றும், இல்லையெனில், இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டுத் தீர்வுகாண நேரிடும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தாமதம் ஏற்படாத வகையில் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி விரைந்து ஒப்பதல் வழங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவில் கூறியிருப்பதாவது:
தற்போதுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி விதிகளை மீறி மது இறக்குமதி செய்துவது, ஏற்றுமதி செய்வது, அருந்துதல் ஆகிய குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது.
இதேபோல், மனித உயிருக்கு கேடு விளைவிக்கக் கூடிய கள்ளச் சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதப்படுவதால் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை தயாரிக்கவும், கொண்டு செல்வதற்கும், வைத்திருப்பதற்கும், நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கள்ளச் சாராயம் அருந்தி மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்றவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
இதேபோல குற்றங்களில் பயன்படுத்தும் அனைத்து அசையும் சொத்துகளையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்த பயன்படுத்தப்படும் உரிமம் இல்லாத இடங்களை மூடி சீலிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு உத்தரவாதத் தொகையுடன் கூடிய பிணை பத்திரத்தை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத் துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே அகற்றுவதற்காக மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய் வதற்கும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய வர்கள், பயன்படுத்தக்கூடிய பொருட்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராத தொகைகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான வழிவகையும் ஏற்படுத்தி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அந்த சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திருமணத்தை தடுக்கும் உள்ளூர் இன்ஃபார்மர்கள்… கொதித்தெழுந்த 90’ஸ் கிட்ஸ்!
ED வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மனு : ஜூலை 16ல் உத்தரவு!