தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (மே 4) டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டி பல்வேறு துறைகளிலும் பேசு பொருளாகியுள்ளது.
தனது பேட்டியில் தமிழக அரசை பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ரவி விமர்சித்திருந்தார். அதில் ஒன்று சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் விவகாரம். ஆளுநர் அளித்த இந்த பேட்டியைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தலையிட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
அப்படி ஆளுநர் என்ன சொன்னார்?
இந்து சமய அறநிலையத் துறை 3 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில் நிலங்களை மீட்டுள்ளதாக கூறுகிறது. இது நல்ல விஷயம்தான். இருந்தாலும் இன்னும் 50,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அதை எல்லாம் மீட்கவில்லை.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2022ல் என்ன நடந்தது என்று பாருங்கள். சமூக நலத்துறையின் கீழ் இருக்கும் உயர் அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டனர். பொது தீட்சிதர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்தனர்.
அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக கூறி வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அத்தகைய திருமணங்கள் நடைபெறவில்லை. பெற்றோர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதோடு ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கன்னித்தன்மையை பரிசோதிக்கும் இருவிரல் பரிசோதனையை செய்திருக்கின்றனர். இதில் சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர்.
அப்போதே இங்கு என்ன நடக்கிறது என்று முதல்வருக்கு கடிதம் எழுதினேன். இப்போது, நடக்கும் அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது அரசுதான். இந்த அரசை நான் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தடை செய்யப்பட்ட பரிசோதனை
இருவிரல் பரிசோதனையை ’தனியுரிமை மீறல்’ என்று 2013ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் கூறியது. எனினும் பல இடங்களில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் 2022ல் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இத்தகைய பரிசோதனைக்கு அறிவியல் அடிப்படை இல்லை. பெண்களை மீண்டும் அது பாதிக்கப்படவும் காயப்படுத்தவும் மட்டுமே செய்யும்” என்று கூறி தடை விதித்தது.
இப்படி தடை செய்யப்பட்ட பரிசோதனையை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படக் கூடிய ஒரு பரிசோதனையை, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய குழந்தைகள் ஆணையம் நோட்டீஸ்
இந்நிலையில்தான் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து ஆளுநர் கூறியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது. அதோடு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதா என விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குழந்தை திருமணம் நடந்ததாக சமூக நலத்துறை அதிகாரிகளின் புகாரின் பேரில் பதிவான எப்.ஐ.ஆர் காப்பி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அதன் நிலை என்ன? கைதான பெற்றோர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களையும் கேட்டுள்ளது தேசிய குழந்தைகள் ஆணையம்.
தீட்சிதர்கள் தரப்பு சொல்வது என்ன?
சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் வழக்கறிஞர் ஜி.சந்திரசேகர், “ சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தவரை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறது.
அதற்காக தீட்சிதர்களை வற்புறுத்துவதற்காகவே இதுபோன்ற சோதனைகளை செய்தார்கள். தற்போது ஆளுநரே பொதுவெளியில் சொல்லியிருப்பதால் இதுபோன்ற சோதனைகளை காவல்துறை தவிர்க்கும், காவல்துறை மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ளும் என்று நம்புகிறேன்.
கோயிலில் பூஜை செய்வதற்கு 21 வயது திருமணமான ஆண் தான் தேவையே தவிர, 21 வயதிற்கு குறைந்த மைனர் சிறுவனுக்கோ, சிறுமிக்கோ திருமணம் செய்தால்தான் பூஜை செய்ய முடியம் என்று தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
தீட்சிதர் மணிவாசகத்திடம் நாம் விசாரித்த போது, “அரசு கட்டுப்பாட்டில் இக்கோயிலை எடுக்க வேண்டும் என்று தான் கடந்த ஆண்டு ஆய்வு செய்தனர். அப்போது தங்க, வைர நகைகளை எல்லாம் ஆய்வு செய்து சென்றனர். ஆனால் இதுவரை அதன் மதிப்பீடு குறித்து எங்களிடம் தெரிவிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து தான் குழந்தை திருமணம் நடத்தியதாக குற்றம்சாட்டி இரு குழந்தைகளை அழைத்து சென்று கன்னித்தன்மை பரிசோதனை செய்தனர். கடந்த ஆண்டு ஆளுநர் சிதம்பரம் கோயிலுக்கு வந்த போது இதுதொடர்பாக அவரிடம் கூறினோம். அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கும் சென்று தீட்சிதர்கள் மனு கொடுத்தார்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறினார். அதுகுறித்துத்தான் தற்போது பேட்டி அளித்திருக்கிறார்” என்றார்.
தீட்சிதர்கள் கைது
சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக கடந்த ஆண்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2021 ஜனவரி 25ஆம் தேதி அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் குழந்தை திருமணம் நடந்ததற்கான பதிவுகள் கிடைத்ததாக கூறி காவல்துறை நடவடிக்கை எடுத்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் உள்ளிட்டோரை கைது செய்தது.
ஆனால் தற்போது அதுபோன்ற திருமணங்கள் நடக்கவில்லை என்றும் சிறுமிகளை கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் ஆளுநர் கூறியிருக்கிறார்.
அதேசமயம், “குழந்தை திருமண விவகாரத்தில் இரண்டு சிறுமிகள் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒருவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கும், மற்றொருவர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனையை மருத்துவர்கள் செய்யவில்லை” என்று சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழக டிஜிபியும் ஆளுநர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படவில்லை. சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றனர் என்பது தவறான குற்றச்சாட்டு. சட்ட ஆலோசகர் அறிவுரைப்படி இரண்டு சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஆனால் கன்னித்தன்மை சோதனை நடத்தப்படவில்லை. குழந்தை திருமண குற்றத்தில் 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 பேர் ஆதாரங்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டனர் என்று டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
தி கேரளா ஸ்டோரி: ’பொய்’ என ஒத்துகொண்ட தயாரிப்பாளர்… மோடி ஆதரவு… தொடரும் எதிர்ப்பு!
ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த ரியல் கேரள ஸ்டோரி!