governor rn ravi against sylendra babu as tnpsc chairman

சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக எதிர்ப்பு: ஆளுநர் எழுதிய குறிப்பு!

அரசியல்

தமிழ்நாட்டின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு பணி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெறுவதற்கு சில வாரங்கள் முன்பிருந்தே, அவர் ஓய்வு பெற்றதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக நியமிக்கப்பட இருக்கிறார் என்று தகவல்கள் வந்தன.

டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆக வேண்டும் என்று சைலேந்திரபாபு பெரு முயற்சியெடுத்தார். இது தொடர்பாக முதல்வரையும் சந்தித்தார். சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆவதற்கு அமைச்சர் உதயநிதியும் ஆதரவாக இருந்தார்.

அதன் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிப்பதற்கான பரிந்துரை, அவர் டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சற்று முன்பாகவே அரசுத் தரப்பில் இருந்து ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இவ்வளவு பலமான பின்புலம் இருந்தும்… ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விவகாரத்தில் சம்மதிக்கவில்லை என்று சில வாரங்களுக்கு முன்பே உயரதிகாரிகள் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்தன.

சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு என்ன காரணம் என்பது பற்றிய தகவல்கள் தற்போது கோட்டை வட்டாரத்தில் இருந்து நமக்கு கிடைத்துள்ளன.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர்,

“இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 316, 319 பிரிவுகளின்படி மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதன்படி டிஎன்பிஎஸ்சி அமைப்பு ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். இவர்கள் அனைவரும் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். இதுதான் சட்டம்.

தற்போதைய டிஎன்பிஎஸ்சி இணைய தளத் தகவல்களின்படி அதன் தலைவர் பதவி காலியாக இருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினரான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன் பொறுப்பு தலைவராக இருக்கிறார். உறுப்பினர்களாக பேராசிரியர் ஜோதி சிவஞானம், டாக்டர் அருள்மதி, ஆரோக்கிய ராஜ் ஆகியோர் இருக்கிறார்கள்.
செயலாளராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்.சும், தேர்வுக் கட்டுப்பாட்டாளராக அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ்.சும் இருக்கிறார்கள்.

கடந்த 2022 ஜூன் 10 ஆம் தேதியில் இருந்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருக்கிறது. இந்த சூழலில்தான்… சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராகவும் மேற்கொண்டு பத்து பேரை உறுப்பினர்களாகவும் பரிந்துரைத்து ஆளுநருக்கு கோப்பு அனுப்பியிருக்கிறது தமிழக அரசு.

ஆனால் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதக் கணக்கில் ஆளுநர் நிறுத்திவைத்திருப்பதாகவும், ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை.

டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 62 வயது வரை அந்த பதவியில் இருக்கலாம் என்பதுதான் சட்டம். தற்போது சைலேந்திரபாபுவுக்கு 60 வயது முடிந்து 61 ஆவது வயது நடந்துகொண்டிருக்கிறது. அதாவது 60 வயதை பூர்த்தி செய்து 2 மாதம் ஆகிறது. டி.என்.பி.எஸ்.சி. விதிகளின்படி சைலேந்திரபாபு இப்போது தலைவராக பதவி ஏற்றாலும் இன்னும் ஒரு வருடம் பத்து மாதங்கள் பணியாற்ற முடியும்.

ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு ஆறு வருட பணிக் காலம் என்றும் அதிகபட்ச வயது 62 என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சைலேந்திரபாபு அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டால் அவரால் சுமார் ஒன்றரை வருட காலம் வரை மட்டுமே தலைவர் பதவியில் செயல்பட முடியும். இந்த குறுகிய காலத்துக்குள் அவரால் முழுமையான செயல்பட முடியாது. அடுத்த ஒன்றரை வருட காலத்துக்குள் வேறொரு தலைவர் வரவேண்டியிருக்கும். எனவே இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கூறி பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்திருப்பதாகவும் அதில் சில விளக்கங்களைக் கேட்டிருப்பதாகவும் தெரிகிறது” என்கிறார்கள்.

நாம் மேலும் இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, “ ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பல விஷயங்களில் முரண்பட்ட போக்கு நிலவி வருகிறது. அதில் இப்போது டிஎன்பிஎஸ்சியும் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக சைலேந்திரபாபு மீது ஆளுநருக்கு குறிப்பிட்ட தனிப்பட்ட வருத்தங்கள் இருக்கின்றன.

சைலேந்திரபாபு டிஜிபியாக இருக்கும்போது அவர் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அதேநேரம் விமான நிலையத்தில ஆளுநர் ஆர்.என்.ரவியும் இருந்தார். அப்போது அதிகாரிகள் சிலர் சைலேந்திரபாபுவிடம், ‘ஆளுநர் இங்கேதான் இருக்கிறார். மரியாதை நிமித்தமாக நீங்கள் சந்திப்பதாக இருந்தால் சந்திக்கலாம்’ என்று கூறியுள்ளனர். அதையடுத்து சைலேந்திரபாபு அங்கிருந்தே தலைமைச் செயலாளரை தொடர்புகொண்டு அவரிடம் தகவல் தெரிவித்த பிறகே ஆளுநரை சந்தித்திருக்கிறார்.

அதுவும் ஆளுநர் இருந்த அறைக்கு சென்று சல்யூட் வைத்தவர் பரஸ்பர நலம் விசாரித்துவிட்டு உடனடியாக மீண்டும் எழுந்து வெளியே வந்துவிட்டார்.
அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘முதல்வர் நல்ல இயல்போடுதான் இருக்கிறார். இதுபோன்ற அதிகாரிகள்தான் முதல்வரை சுற்றி இருந்துகொண்டு வேறு மாதிரி செயல்படுகிறார்கள்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததாக விமான நிலைய வட்டாரத்தில் அப்போதே தகவல்கள் கசிந்தன. மதுரையில் மட்டுமல்ல வேறு சில இடங்களிலும் ஆளுநருக்கும் சைலேந்திரபாபுவுக்கும் இடையே இறுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

இதையும் இப்போது சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கான பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்ளாமல் விளக்கம் கேட்டிருப்பதையும் ஒன்றுபடுத்தி பார்க்க கூடாது” என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
-வேந்தன்

அதிமுக மாநாடு – விபத்தில் 8 பேர் பலி: ஈபிஎஸ் நிதியுதவி!

கல்லூரிக்குள் நாட்டு வெடி குண்டு வீச்சு?: சென்னையில் அதிர்ச்சி!

+1
0
+1
5
+1
0
+1
3
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *