சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து பொன்முடி மீண்டும் இன்று(மார்ச் 22) அமைச்சராக பதவி ஏற்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
இதனால் அவரை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கடந்த மார்ச் 13ஆம் தேதி ஆளுநருக்கு கடிதம் எழுதினார் முதல்வர் ஸ்டாலின்.
ஆனால் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்துவிட்டார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஆளுநருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சாதகமான முடிவுகளை எடுக்கவில்லை என்றால் நாங்கள் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
இந்நிலையில் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் தரப்பில் இன்று காலை அழைப்பு விடுக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைக்க ஒப்புதல் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதைதொடர்ந்து 3 மணிக்கு மேல் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பொன்முடி ஆகியோர் ஒரே காரில் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர்.
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர்.
அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் பதவி ஏற்பு விழா தொடங்கியது. பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
“க.பொன்முடி எனும் நான் சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும்
இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும் ஒருமையும் நிலைநிறுத்துவேன் என்றும் தமிழ்நாடு அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின் படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அரசியமைப்பிற்கும் சட்டத்திற்கும் இணங்க அச்சமும் ஒருதலைசார்பும் இன்றி விருப்பு வெறுப்பை விளக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமார உறுதிமொழிகிறேன்” என்று கூறி பதவி ஏற்றார் பொன்முடி.
இதையடுத்து ஆளுநருக்கும், முதல்வருக்கும் அமைச்சர் பொன்முடி பூங்கொத்து கொடுத்தார்.
தொடர்ந்து, பொன்முடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கெஜ்ரிவால் வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவிற்கு 30 கோடி கொடுத்தது அம்பலம்!
கெஜ்ரிவால் கைதுக்கு அவரே காரணம் – முன்னாள் குரு அன்னா ஹசாரே
உச்ச நீதிமன்றத்திலும் மன்னிப்பும் கேட்டாச்சு, எல்லாரும் கெளம்புங்க