பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் மூத்த தலைவரான பொன்முடி, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் தொகுதியில் வெற்றிபெற்று தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2006-11 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் குற்றவாளியாக அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது.
இதன் காரணமாக உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அதன்படி அவர் மீண்டும் எம்எல்ஏ ஆனார்.
மேலும் பொன்முடியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கும் வகையில் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், பொன்முடியை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் மட்டும் தான் நிறுத்தி வைத்துள்ளது, குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளிக்கவில்லை என்றும், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை அவர்கள் தந்திருக்கலாம். இருப்பினும் பொன்முடி நிரபராதி எனத் தீர்ப்பளிக்கவில்லை, அவர் மீதான குற்றங்கள் அனைத்தும் அப்படியே இருக்கிறது. எனவே பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே தமிழ்நாடு அரசியல் பரபரப்பாக காணப்படும் நிலையில், பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளியான தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, பொன்முடியின் பதவிப் பிரமாணத்தை ஏற்க மறுத்த ஆளுநரின் செயல்பாடுகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும், இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற உடைகள் இதோ…
ஹெல்த் டிப்ஸ்: ‘புரோட்டீன் பவுடர்’ எல்லாருக்கும் ஏற்றதா?