அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்திருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜுன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு பகிர்ந்தளிக்கவும் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கும் ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது தவறானது என்று அந்த கடிதத்தை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்தசூழலில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை துஷ்பிரோயகம் செய்து விசாரணையில் செல்வாக்கு செலுத்தி சட்டம் மற்றும் நீதி வழங்குவதை தடுக்கிறார்.
அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வரும் குற்ற வழக்குகளில் நீதிமன்ற காவலில் உள்ளார். அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பாதிக்கும். இது இறுதியில் மாநிலத்தின் அரசமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அம்சங்கள் உள்ளது. இதனால் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ரவி உடனடியாக நீக்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. நாங்கள் இதனை சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார்.
உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி அமைச்சர் பதவி நீக்கம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் செந்தில் பாலாஜியின் நீக்கம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தது தொடர்பான கடிதத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்துள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற தீர்ப்புகள்!
டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் வகித்து வந்த சுகாதாரத்துறை இலாகாவை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு ஒதுக்கி சத்யேந்திர ஜெயினை இலாகா இல்லாத அமைச்சராக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
சத்யேந்திர ஜெயினை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம், ஒருவரை அமைச்சராக தொடர வைப்பது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உரிமை. மாநிலத்தின் நலன் கருதி செயல்படுவதும் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர் அமைச்சராக தொடர வேண்டுமா இல்லையா என்பது முதல்வரின் முடிவு என்று தெரிவித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சத்தியேந்திர ஜெயின் டெல்லி அமைச்சரவையில் 9 மாதங்கள் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து நீடித்தார். பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
செந்தில் பாலாஜி விவகாரத்திலும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்தன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவி நீக்கத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் ஆளுநருக்கு எதிராக இருப்பதால் வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி மீண்டும் ஆளுநர் ரவி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா: ஃப்ரூட்ஸ் டிலைட்
போலி ரசீது ரூ.3.22 கோடி சுருட்டிய கான்ஸ்டபிள்கள்!
