டிஜிட்டல் திண்ணை: கலாமை புறக்கணித்த கவர்னர்… மோடிக்காக ரவி போடும் ராம்நாடு ஸ்கெட்ச்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விசிட் அடித்த காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. ’மக்கள் ஆளுநர் ரவி வாழ்க’ என்ற கோஷங்களும் அந்த காட்சிகளில் கேட்டன.

அவற்றைப் பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏப்ரல் 18, 19 தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இதில் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் ஆளுநர் மீது அரசியல் சர்ச்சைகளை மீண்டும் கிளப்பி உள்ளன.

ஏப்ரல் 18ஆம் தேதி ராமநாதபுரம் சர்க்யூட் ஹவுஸில் ஆளுநர் ரவி தேவேந்திர குல சமுதாய பிரதிநிதிகளையும் தேவர் சமுதாய பிரதிநிதிகளையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடி அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதன் பிறகு யாதவர் சமுதாய பிரதிநிதிகளையும் சந்தித்த ஆளுநர், அவர்களிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக இன்று ஏப்ரல் 19ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆளுநர் ரவி அஞ்சலி செலுத்தினார்.

இதற்கிடையே எட்டி வயல் கிராமத்தில் இருக்கும் ஆர்கானிக் மூலிகை பண்ணைக்கு சென்ற ஆளுநர் அங்கே இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகளையும் பழங்களையும் பார்த்தார். அப்போது அவருக்கு பனை நுங்கு  வழங்கப்பட்டது. அதை ருசித்து சாப்பிட்டார் ஆளுநர். இதில் இன்னும் ருசியான தகவல் என்னவென்றால் இந்த மூலிகைப் பண்ணையை வைத்திருப்பவர் ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரான தரணி முருகேசன்.

சமீபத்தில் ராமநாதபுரம் பாஜகவுக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் மாவட்ட அமைப்பையே கலைத்தார் மாநில தலைவர் அண்ணாமலை. அதன் பிறகு தரணி முருகேசனை புதிய மாவட்ட தலைவராக நியமித்தார். இந்த நிலையில்தான் மாவட்ட பாஜக தலைவருக்கு சொந்தமான மூலிகை பண்ணையை ஆளுநர் பார்வையிட்டார்.

அவரோடு மாவட்ட பாஜக தலைவரான தரணி முருகேசன் ஆளுநரோடு அங்கே இருந்தார். ஆளுநர் அருகே பாஜக பிரமுகர்கள் புடை சூழ நின்றனர். இப்படி சமுதாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் திட்டமிட்டே ஆளுநரின் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமுதாய அடிப்படையில் தேவேந்திர குல வேளாளர்கள், முக்குலத்து சமுதாயத்தினர், யாதவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் அடர்த்தியாக வசிக்கிறார்கள். ஆளுநர் ரவி தனது சுற்றுப்பயணத்தின் போது முஸ்லிம்களைத் தவிர பிற முக்கியமான சமுதாயத்தினர் பிரதிநிதிகளை சந்தித்தது உற்று நோக்கப்படுகிறது.

இதையெல்லாம் விட தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயணம் செல்லும் போது… இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பேய்க்கரும்பு கிராமத்தில் இருக்கும் நிலையில் அங்கே தான் முதலில் சென்றிருக்க வேண்டும்.

அரசியல் அமைப்பு பதவி வகிக்கும் ஆளுநர்… இந்தியாவின் உச்சபட்ச அரசியல் அமைப்பு பதவியான குடியரசுத் தலைவர் பதவியை வசித்த அப்துல் கலாமின் நினைவிடம் இருக்கும் மாவட்டத்திற்கு செல்லும் போது அவரது நினைவிடத்திற்கு சென்று முதலில் மரியாதை செலுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் ஆளுநர் ரவி பயணத்தில் கலாம் நினைவிட விசிட் விட்டுப் போனது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆளுநரின் தற்போதைய செயலாளராக இருக்கும் ஆனந்தராவ் பாட்டில் ஏற்கனவே சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருந்தவர். சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களின் தட்பவெப்பம் அறிந்தவர். ஆளுநரின் நிகழ்ச்சியின் நிரலை வடிவமைத்ததில் அவரது பங்கும் இருப்பதாக ராஜ்பவன் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே ஒரு பேச்சு எழுந்து அப்படியே காற்றில் போனது. ஆளுநர் ரவியின் இந்த விசிட் ஒருவேளை மோடி ராமநாதபுரம் தொகுதியில் நிற்பாரோ என்ற யூகங்களுக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறது  என்று மாவட்ட பாஜகவினரே உற்சாகமாக சொல்கிறார்கள். இதை உறுதிப்படுத்துவது போல அமைந்திருக்கிறது இரண்டு நாள் ராமநாதபுரம் பயணம் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருக்கும் செய்தி.

’நமது பிரதமர் மோடி மீது மக்கள் கொண்டுள்ள அபரிமித அன்பும் அவரது எழுச்சியூட்டும் தலைமை மீது கொண்டுள்ள நம்பிக்கையும் வெகு அற்புதம்’ என்று தனது பயணத்தில் உணர்ந்ததாக செய்தி வெளியிட்டுள்ளார் ஆளுநர் ரவி.

ஏப்ரல் 10 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தில் பேசிய திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், ‘வேணும்னா கவர்னர் பதவியை ரிசைன் பண்ணிட்டு பிஜேபியில சேர்ந்துக்கோ’ என்று கூறினார். ஆனால் ஆளுநர் ரவி அந்த பதவியில் இருந்துகொண்டே பாஜகவினரோடு வெளிப்படையாக பழகிய காட்சிகளுக்கு சாட்சியாகியிருக்கிறது ராமநாதபுரம் விசிட்”   என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

சீனாவின் மக்கள்தொகையை மிஞ்சிவிட்டதா இந்தியா?

அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்!

Governor Ravi who ignored Kalam
+1
0
+1
0
+1
1
+1
4
+1
3
+1
0
+1
0

1 thought on “டிஜிட்டல் திண்ணை: கலாமை புறக்கணித்த கவர்னர்… மோடிக்காக ரவி போடும் ராம்நாடு ஸ்கெட்ச்!

  1. மோடி செல்லும் போது அவரோட ஐயா கலாம் நினைவிடம் ஆளுநர் செல்வார்..போதுமா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *