கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டையை சேகரிக்கும்படி ஆளுநர் ரவி வாய்மொழி உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால், சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில்,
“அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டையின் எண்களின் விவரங்களை சேகரிக்க ஆளுநர் மாளிகையில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்லூரி முதல்வர்கள் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் அடையாள அட்டை எண்களை எக்ஸல் ஷீட் ஃபார்மட்டில் admin@tnteu.ac.in என்ற மின்னஞ்சலுக்கு மார்ச் 19-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வாக்காளர் அட்டை விவரங்களை சேகரிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் பதிவாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், “கல்லூரி மாணவர்களின் அடையாள அட்டை எண்களை சேகரிக்க அனுப்பிய சுற்றிக்கை ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் 11-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களை கூட்டி ஆளுநர் ரவி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவிகிதம் மாணவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும், அடுத்த 10 நாட்களுக்குள் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செல்வம்
WPL 2024: நடப்பு சாம்பியன் MI தோல்வி… இறுதிப்போட்டிக்குள் நுழைந்த RCB!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!