தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்று சேலத்தை சேர்ந்த அம்மாசியப்பன் ராமசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் எண்ணி துணிக என்ற தலைப்பில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஆகஸ்ட் 12) கலந்துரையாடினார்.
அப்போது சேலத்தை சேர்ந்த மாணவி ஒருவரின் பெற்றோரான அம்மாசியப்பன் ராமசாமி ஆளுநர் ரவியிடம் “நீட் தேர்வுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஆளுநர் ரவி, “நீட் தேர்வுக்கு ஒரு போதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன். நீட் தேர்வு பொதுப்பட்டியலில் உள்ளதால் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும். மாணவர்கள் அறிவு திறனை குறைக்க நான் விரும்பவில்லை.
நீட் பயிற்சிக்கு செல்லாமல் நிறைய மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பயிற்சி மையத்தில் படித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற போலியான பிம்பத்தை உருவாக்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
தொடர்ச்சியாக அம்மாசியப்பன் கேள்வி எழுப்பியதால் அவரது மைக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பறித்து சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாசியப்பன் ராமசாமி,
“என்னுடைய மகள் நீட் தேர்வில் 623 மார்க் வாங்கியிருக்கிறார். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது.
கடந்த ஐந்து வருடமாக தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுகிறோம். பள்ளிகளில் பயிற்சி நிறுவனங்களுடன் சேர்ந்து தான் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வால் தமிழகத்தில் 15 குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர்.
நீட் தேர்வு பயிற்சிக்காக எனது மகளுக்கு ரூ.20 லட்சம் செலவு செய்திருக்கிறேன். மற்ற பெற்றோர்கள் இதனை செய்ய முடியுமா? மாணவர்கள் நீட் தேர்வுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டுமா?.
1965-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி. அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நீட் தேர்வுக்கு படித்தார்களா? அரசு பள்ளிகளில் படித்த 652 மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்ததாக ஆளுநர் கூறுகிறார். 7.5 சதவிகித இட ஒதுக்கீடு காரணமாக தான் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தது.
அதனால் தான் நீட் தேர்வுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள் என்று ஆளுநரிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர் விலக்கு அளிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அனைத்து கட்சிகளும் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறும்போது ஆளுநர் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்கிறார். நாங்கள் அரசை நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!
Comments are closed.