தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் செய்கிறார். இதுவரை 14-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதலளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இந்தநிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ரவியிடம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எத்தனை மசோதாக்கள் நிலுவையில் உள்ளது என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,
“என்னிடம் எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை. 2021-ஆம் ஆண்டு நான் ஆளுநராக பொறுப்பேற்ற போது 19 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு எனது ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
அதில் 18 மசோதாக்களுக்கு நான் ஒப்புதல் அளித்தேன். நீட் விலக்கு மசோதா மட்டும் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. 2022-ஆம் ஆண்டு 59 மசோதாக்கள் அனுப்பப்பட்டது. அதில் 48 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்.
மூன்று மசோதாக்கள் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஒரு மசோதாவை தமிழக அரசு திரும்ப பெற்றது.
8 மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு வரை எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை. 2023-ஆம் ஆண்டில் 7 மசோதாக்கள் அனுப்பப்பட்டது. அனைத்து மசோதாக்களுக்கும் நான் ஒப்புதல் அளித்துள்ளேன்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஒரு கருத்தாக்கம் உள்ளது.
அரசியலமைப்பின் 200-வது சட்டபிரிவின் படி சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும் என்று ஆளுநருக்கு இதில் மூன்று வாய்ப்புகள் உள்ளது.
இதனால் ஒரு மசோதா நிறுத்திவைக்கப்பட்டால் காலாவதியானதாக பொருள் என்று நான் தெரிவித்திருந்தேன். அதில் எந்த குழப்பமும் இல்லை.
அரசியலமைப்பு சட்டத்தின் படி கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் 8 மசோதாக்களுக்கு நான் ஒப்புதல் அளிக்கவில்லை. கல்வி நிறுவனங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாக இயங்க பல்கலைக்கழக மானியக்குழு வழிவகை செய்கிறது.
ஆனால் எதிர்பாராத விதமாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தன்னாட்சி அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் கூட்டங்கள் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.
பல்கலைக்கழகங்களில் தகுதி வாய்ந்த துணைவேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு மட்டும் தான் ஆளுநர் வசம் உள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு முதல்வருக்கு வழங்கினால் முழுவதுமாக கல்வி நிறுவனங்கள் அரசியல் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும்.
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா பல்கலைக்கழக மானிய விதிகளுக்கு எதிராக உள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
செல்வம்
ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!