தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனக்கு குழந்தை திருமணம் நடந்ததாக மாணவர்கள் மத்தியில் கூறியுள்ளார்.
கடந்த மே 4ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,
“சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடப்பதாக தீட்சிதர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நடராஜர் கோயில் தீட்சிதர்களின் பிள்ளைகளுக்கு பால்ய திருமணம் எதுவும் நடைபெறவில்லை.
ஆனால் குழந்தைகளின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு, ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் சில சிறுமிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு நான் கடிதம் எழுதினேன்” என்று தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டது. ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் மறுப்புத் தெரிவித்தார்.
“சிறுமிகள் யாருக்கும் கன்னித்தன்மை பரிசோதனை நடைபெறவில்லை. சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. குழந்தை திருமணம் தொடர்பாக உண்மையை கண்டறிந்த பின்னர் குற்றத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டும் சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மின்னம்பலம் புலனாய்வு விசாரணை செய்து செய்தி வெளியிட்டது.
கடந்த மே 8-ஆம் தேதி பால்ய திருமணம், இருவிரல் டெஸ்ட்…உண்மை என்ன? என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புலனாய்வு செய்தியில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு பால்ய திருமணம் செய்து வைக்கப்பட்டது உண்மைதான் என புகைப்பட ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தோம்.
குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என்றும் கூறியிருந்தோம்.
இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கு மிக இளம் வயதில் குழந்தை திருமணம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.
இன்று (மே 12) ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் திட்டத்தில் பீகார் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது பேசிய ஆளுநர் ரவி, “தமிழ் மொழி மிகவும் பழமையானது. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் உள்ள கருத்துக்கள் மிகவும் ஆழமானது.
மாணவர்களாகிய உங்களிடம் இருந்து நாடு நிறைய எதிர்பார்க்கிறது. பாரத நாடு கலாச்சாரம் மற்றும் நாகரீக வளர்ச்சியால் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகும். திராவிட நிலத்தில் பக்தி இயக்கம் வளர்ந்தது. வெளிநாட்டினர் இந்தியாவில் இருந்து வெளியேறியபோது நிர்வாக வசதிக்காக மாநிலங்களை உருவாக்கினோம்.
1956-ஆம் ஆண்டு மொழி வாரி மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால் கன்னடிகா, பீகாரி, குஜராத்தி, தமிழ் என அரசியல் செய்யப்படுகிறது. இது நமது நாட்டின் ஒற்றுமையை பலவீனப்படுத்துகிறது.
நாம் மதத்தாலும், மொழியாலும் வேறுபட்டிருந்தாலும் நமது நாட்டின் கலாச்சாரம் நம்மை ஒன்றிணைக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் மாணவர் ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறும் நேரத்தில் தோல்வி அடைந்தால் அதில் இருந்து எப்படி வெளிவருவது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஆளுநர் ரவி, “தோல்வி உங்களை தோற்கடிக்க நீங்கள் இடம் கொடுக்க கூடாது. ஒருவேளை தோல்வி அடைந்தால் அதனை பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பகவத்கீதையில் “நீங்கள் தான் உங்கள் சிறந்த நண்பனும் எதிரியும்” என்ற புகழ்பெற்ற வாசகம் உள்ளது. நான் எதையாவது சாதிக்க நினைத்தால் என்னை சுற்றி எழும் பிரச்சனைகளை கண்டுகொள்ள மாட்டேன். வாழ்க்கை முழுவதும் ஒரு நபர் வெற்றி மட்டுமே அடைந்திருப்பதாக கூறினால் அவர் பொய் சொல்கிறார்.
ஒவ்வொருவர் வாழ்விலும் வெற்றி தோல்வி இருக்கும். எனது வாழ்க்கையில் பல பின்னடைவுகளை சந்தித்துள்ளேன். நான் தோல்வி என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். இந்த உலகத்தை அசைத்து பார்ப்பதற்கான ஆற்றல் மாணவர்களாகிய உங்களிடம் உள்ளது.
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உதவும் போது உணர்வுப்பூர்வமாக அது உங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். இந்த தருணத்தில் நான் ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு மிக இளம் வயதில் குழந்தை திருமணம் நடந்தது. நானும் எனது மனைவியும் சேர்ந்தே வளர்ந்தோம். அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. அவர் தான் எனது முழு பலம். இந்த உலகத்தையே எதிர்க்கும் திறனை அவர் எனக்கு அளித்தார்.
எந்த இடத்திற்கு சென்று நான் திரும்பி வந்தாலும் எனக்காக என் மனைவி காத்திருப்பார். அவரது உதவிகள் எனது வெற்றிக்கு மிகவும் பக்கபலமானதாக இருந்தது” என்று தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை. தீட்சிதர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் கூறியது தமிழக அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளான நிலையில் தனக்கு மிக இளம் வயதில் குழந்தை திருமணம் நடந்ததாக ஆளுநர் கூறியது மீண்டும் முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
மருத்துவ கல்லூரி கலந்தாய்வு: மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!
திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!
உன் சுயசரிதை யாரு கேட்டா, உங்களுக்கு தனி சட்டமா? குழந்தை திருமணம் தடுக்க சட்டம் இருக்கும் போது அதனை ஆதரிப்பது நாட்டை நீதியை அவமதிப்பதாகும்.
பைத்தியக்காரனாட்டாம் அவன் பேசுறான்… விட்டு தள்ளுங்கப்பா…