ஆளுநர் மாளிகை செலவினங்களில் விதிமீறலா?: பிடிஆருக்கு ஆர்.என்.ரவி பதில்!

அரசியல்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது விருப்புரிமை நிதியை ஒதுக்குவதில் ஆளுநர் ஆர்.என்.ரவி விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து சட்டமன்றத்தில் அவர் பேசும்போது, “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆளுநர் செயலக செலவுகள், ஆளுநர் மாளிகை செலவுகள், விருப்புரிமை நிதி என்ற மூன்று தலைப்புகளில் நிதி ஒதுக்கப்படுகிறது.

Petty Grant என்ற ஆளுநரின் விருப்புரிமை நிதிக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. பொதுத்துறை அல்லது அரசு தனியார் பங்களிப்பில் செயல்படும் நிறுவனங்களுக்கும் அரசின் நிதியை பெற தகுதியான தனி நபர்களுக்கும் இந்த நிதி வழங்கப்படுகிறது.

இதில் அட்சய பாத்திரா திட்டத்திற்கு மட்டும் ஆளுநர் ரூ.4 கோடி வழங்கியுள்ளார். அதுபோல ஆளுநரின் தேநீர் விருந்துக்கு ரூ.30 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஊட்டி ராஜ் பவனில் கலாச்சார நிகழ்ச்சிக்கு ரூ.3 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டுக்கு பிறகு யுபிஎஸ்சி மாணவர் கூட்டத்திற்கு ரூ.5 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

governor ravi reply ptr discretionary fund

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது என்று ஆளுநர் ரவி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த அவர்,

“என் மீது குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் ஒழுக்கமானவர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தமிழக மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.

நிதியமைச்சரின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது. முதலாவதாக ஆளுநரின் விருப்புரிமை நிதியில் Petty Grant சிறு தொண்டு நிறுவனங்களுக்கும் ஏழைகளுக்கும் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்க வேண்டும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

2000-ஆம் ஆண்டிலேயே ஆளுநருக்கான நிதிக்குறியிட்டிலிருந்து Petty Grant என்ற பதம் நீக்கப்பட்டது. ஆளுநர் மாளிகை செலவினம் பட்ஜெட்டுக்கு உட்பட்டது. அதற்கென வரம்புகள் இல்லை என்றே நிதிக்கோட்பாடுகளில் குறிப்பிடப்படுகிறது.

இரண்டாவதாக அவர் அட்சய பாத்திரா திட்டத்தை குறிப்பிட்டார். 2000-ஆம் ஆண்டில் ஏழை மாணவர்களின் இடைநிற்றலை பற்றி கவலைப்பட்ட அப்போதைய ஆளுநர் அவர்களுக்கு ஆரோக்கியமான இலவச உணவை வழங்க விரும்பினார். அட்சயா பாத்திரா மிகவும் பிரபலமான NGOஆகும்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் 20 லட்சம் குழந்தைகளுக்கு இலவச உணவை வழங்குகிறார்கள். அக்‌ஷயா பாத்ரா சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு இலவச உணவை வழங்க முன்வந்தது. அவர்கள் விரும்பியதெல்லாம் மாணவர்களுக்கு ஆரோக்கியமான சுகாதாரமான உணவை வழங்க வேண்டும் என்பது தான்.

இதற்காக அமைக்கப்பட்ட சமையலறைக்கு ரூ.5 கோடி செலவானது. இந்த தொகையை ஆளுநர் தனது விருப்ப மானியத்தில் இருந்து மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து வழங்கினார்.

அட்சய பாத்திரா திட்டத்திற்கான அனைத்து ஆவணங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் உள்ளது. 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சமையலறை கட்டப்பட்டு குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்பிற்காக மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டது.

governor ravi reply ptr discretionary fund

முதல்வர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 16 மாதங்களாக முதல்வர் அலுவலகத்தில் அனுமதி வாங்க அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் முதல்வர் அனுமதியை பெறவில்லை.

ஆளுநர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து தேநீர் விருந்து நடத்துகிறார் என்பது மற்றொரு குற்றச்சாட்டாகும். பாரம்பரியமாக நமது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது.

முன்னதாக இந்த நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் மட்டும் தான் கலந்து கொள்வார்கள். அதனை நான் மாற்றி இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தேன்.

இதனால் குடியரசு தின விழா தேநீர் விருந்து நிகழ்ச்சியில் 3000 பேர் கலந்து கொண்டனர். ஆளுநர் தேநீர் விருந்து நடத்துவது அவமரியாதை என்றால் அது தமிழக மக்களையும் சுதந்திர தினம், குடியரசு தினத்தையும் அவமரியாதை செய்வதாக தான் நான் கருதுகிறேன்.

யுபிஎஸ்சி மாணவர் கூட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதாக கூறுகிறார்கள். நான் அரசு பணியில் சேர்ந்த போது தமிழகம் தான் அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்களை கொண்டிருந்தது. இன்று தமிழகத்தை விட பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இதனால் 250 முதல் 300 ஏழை மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு வழிகாட்டுகிறேன். நான் அவர்களை பசியோடு அனுப்ப மாட்டேன். அவர்களுக்கு உணவளிப்பேன்.

ஆளுநர் ஊட்டியில் தேநீர் விருந்து நடத்தி பல லட்சம் ரூபாய் செலவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த தேநீர் விருந்தில் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்பது அவருக்கு தெரியுமா. அன்று மாலை முழுவதும் அவர்களுடன் நான் நேரம் செலவிட்டு அவர்களது பிரச்சனைகளை கேட்டேன்.

நான் எனது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவு கட்டணத்தை முறைப்படி செலுத்துகிறேன். ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம் மற்றும் சலுகைகளின் அடிப்படையில் அவர் உணவு கட்டணத்தை செலுத்த வேண்டிய தேவை இல்லை. இருப்பினும் நான் உணவு கட்டணத்தை செலுத்துகிறேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

செல்வம்

வரலாற்றில் முதல்முறை: 46 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
2
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0

1 thought on “ஆளுநர் மாளிகை செலவினங்களில் விதிமீறலா?: பிடிஆருக்கு ஆர்.என்.ரவி பதில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *