தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் இன்று (ஜூலை 17) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி ஐந்து நாட்கள் பயணமாக சென்னையில் இருந்து ஆளுநர் ரவி டெல்லிக்கு பயணம் சென்றார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்த ரவி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழகத்தின், அரசியல் நிலவரம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக ஆளுநர் ரவி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டு மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வையும் சந்தித்தார்.
இந்தநிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று டெல்லியில் சந்தித்த ஆளுநர் ரவி, புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு முறைகேடுகள், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழ்நாட்டில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன். திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு மிகவும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தனுஷுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.ஜே.சூர்யா: ‘ராயன்’ டிரைலர் எப்படி?
ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை!