மோடி, அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்தது ஏன்?

Published On:

| By Kavi

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (டிசம்பர் 24) பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியுள்ளார். 

தமிழ்நாடு ஆளுநர் ரவி கடந்த 22ஆம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். மூன்று நாட்களாக டெல்லியில் இருந்து வருகிறார். ஆளுநர் ரவியின் பதவி காலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. எனினும் விதிகளின்படி புதிய ஆளுநர் பதவியேற்கும் வரை அவரே ஆளுநராக தொடர்ந்து வருகிறார். 

அதேசமயம் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து பேசினார். 

இந்த நிலையில் ஆளுநர் ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இன்று காலை அவர், பிரதமர் மோடியையும் மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார். 

பிரதமரை சந்தித்தது பற்றி தமிழ்நாடு ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடியை சந்தித்து ஆளுநர் பயனுள்ள ஆலோசனைகளை மேற்கொண்டார். மாநில மக்கள், தமிழ் மொழி, இலக்கியம் மீது அளவற்ற அன்பு செலுத்தும் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்’என்று கூறப்பட்டுள்ளது. 

அமித்ஷாவை சந்தித்தது பற்றி, “உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷவை ஆளுநர் சந்தித்து மாநிலம் தொடர்புடைய தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விளக்கினார்” என்று பதிவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று இரவு கேரளா, பீகார்,மணிப்பூர், மிசோரம் ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதன்படி, மிசோரம் ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி ஒடிசா ஆளுநராகவும், பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் கேரள ஆளுநராகவும்,

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பீகார் மாநில ஆளுநராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 

மிசோரம் மாநிலத்திற்கு புதிய ஆளுநராக விஜயகுமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்திற்கு அஜய்குமார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

எனினும் தமிழ்நாட்டு ஆளுநரின் பதவி காலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையிலும் இன்னும் புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

இந்த வருசத்துல என்ன சாதிச்சீங்க : அப்டேட் குமாரு

பெண்கள் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel