தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் இன்று (டிசம்பர் 24) பிற்பகல் 2 மணிக்கு 35ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாட்டை மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷையன் செய்துள்ளார்.
இவ்விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்குகிறார். இதற்காகப் பல்கலைக் கழகம் தரப்பிலிருந்து ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இவ்விழாவுக்குத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை, ஆளுநர் அல்லாமல் மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்கலைக் கழகங்கள் பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர் ரவி மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று காரசாரமாகப் பேசியது எல்லாம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
குறிப்பாகக் கோவை பாரதியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா கடந்த மே மாதம் நடைபெற்ற போது, அமைச்சர் பொன்முடி, “இந்தி தெரிந்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். அப்படியானால் தமிழகத்தில் பானிபூரி விற்பவர்கள் யார்” என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் விழா மேடையில் பேசிய ஆளுநர், “மத்திய அரசு ஒரு மொழியைத் திணிக்க முயல்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி இல்லை. புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது. இந்தி மொழி திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவில் எல்லா மொழிகளும் வளர ஊக்குவிக்கப்படும்” என்று கூறினார்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தற்போது ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அளவுக்கு வந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர். பாலு தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று கையெழுத்திட்டுக் கடந்த நவம்பர் மாதம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைத்தனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுகுறித்து விவாதிக்க மக்களவைத் தலைவர் அனுமதி கொடுக்காததால் வெளிநடப்பு செய்தனர்.
இதுமட்டுமின்றி மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் ஆளுநரை திரும்பப் பெறத் தனிநபர் மசோதா கொண்டு வந்தார். அதில், ”ஆளுநர் செயல்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டால் அவரை தகுதி நீக்கம் செய்ய வழிமுறை வகுக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அரசியல் சாசன பிரிவு 102, 155, 156 ஆகியவற்றில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுபோன்று ஆளுநருக்கு எதிராக திமுகவினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்துகொள்வதாக அழைப்பிதழ் சொல்கிறது.
ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை மா.சுப்பிரமணியன் புறக்கணிப்பாரா? அல்லது மாணவர்களுக்குப் பட்டமளிக்கும் நிகழ்ச்சியில் அரசியல் வேண்டாம் என்று பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரியா
எம்ஜிஆர் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி மரியாதை!
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்: சினிமா துறைக்கு நல்லதா கெட்டதா?