ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நாளை (மே 24) மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து இருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தன்று காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், இந்த புகைப்படத்தை ஆளுநர் மாளிகை சமூக வலைதள பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது.
ஆளுநரின் இந்த பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, அதிமுக எம்.பி தம்பிதுரை, திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், மீண்டும் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை ஆளுநர் ரவி பயன்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வைகாசி மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரமே திருவள்ளுவர் பிறந்த தினம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.
முன்னாள் முதல்வர் கலைஞர் 1971-ஆம் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு எனும் ஆண்டுத்தொடரை அறிமுகப்படுத்தி அரசிதழ் வெளியிட்டார். அப்போது திருவள்ளுவர் தினமானது ஜனவரி 15 என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்தநிலையில், நாளை அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி திருவள்ளுவர் தினத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
வள்ளுவருக்கு காவி உடை சரியா, தவறா என்பதோடு.. திருவள்ளுர் தினம் வைகாசி அனுஷமா, தை 2 ஆம் நாளா என்ற விவாதமும் தொடர்ந்து நடந்து வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…