சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர், கபீர் தாஸ், யோகி வெமனா ஆகியோரின் எழுத்துக்கள் தொடர்பான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று(நவம்பர் 16) தொடங்கியது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் உரையாற்றுகையில் “இரண்டு நாட்களுக்குத் திருவள்ளுவர், கபீர் தாஸ் மற்றும் யோகி வெமனா போன்றவர்களின் எழுத்துகள் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட இருக்கின்றன என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்கள் பாரதத்தின் வெவ்வேறு இடங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் எழுத்துக்கள் மனித இனத்தின், பாரதத்தின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றன.
தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் படைக்கப்பட்ட இலக்கியங்களைப் படித்துப் பார்த்தால், அவை அனைத்தின் அடிநாதமாகப் பாரதத்தின் ஒற்றுமை தான் இருக்கும்.
இந்த ஒற்றுமை குறித்த பொதுவான கருத்து எப்படி உருவானது, எங்கிருந்து உருவானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் பாரதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்கால கல்விமுறையில் பாரதம் என்றால் என்ன என்பதை நாம் நமது குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில்லை. அவர்களுக்கு இந்தியா மட்டும்தான் தெரியும்.
பாரதம் என்பது இந்தியாவை விட பெரியது. பாரதம் என்பது ஒரு பொலிடிகல் ஸ்டேட் அல்ல. பாரதம் மிகப் பழமையானது.
பாரதம் என்றால் என்ன? பாரதம் என்பது ராஷ்ட்ரியம், ராஷ்டிரியம் என்றால் தேசம் அல்ல. தேசம் என்பது ஐரோப்பியர்கள் உருவாக்கின ஒரு கருத்து.
ரிக் வேதத்தில் ‘ராஷ்ட்ரியம்’ பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ரிக் வேத காலத்தில் உலக நல்லினத்திற்காகத் தவம் செய்த ரிஷிகளினால் தான் ராஷ்டிரம் உருவானது. அப்படிதான் பாரதம் உருவானது. மேலும் பகவத்கீதையிலும் கிருஷ்ணர், உலகின் அனைத்து படைப்புகளின் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறார்.
நாம் இந்த ஒற்றுமையைக் கொண்டாட வேண்டும். மதத்தின் அடிப்படையில் பாரதம் உருவாகவில்லை. தர்மத்தின் அடிப்படையில் உருவானது. எதுவொன்று நல்லிணக்கத்தை உறுதிசெய்கிறதோ அதுவே தர்மம் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று பேசினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தனுஷுடன் நடித்த நடிகைகளும் நயன்தாராவிற்கு ஆதரவு!