“ஆளுநர் ரவி நீக்கப்படுவதற்கு தகுதியானவர்” : மு.க.ஸ்டாலின்

அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதிய 19 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்து கடிதம் அனுப்பியதையும், பின்னர் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக எழுதிய கடிதத்தையும்,  இந்த இரு கடிதங்களுக்கு தான் ஒரு கடிதம் அனுப்பியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஜூலை 8ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “

தனது அமைச்சரவை சகாக்களில் ஒருவரான செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளை தனது அமைச்சரவையில் உள்ள வேறு இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய விரும்பி, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தக்கவைக்க விரும்பி இலாகா மாற்றம் தொடர்பான கடிதத்தை 15.6.2023 அன்று ஆளுநருக்கு அனுப்பினேன்.

16.6.2023 அன்று ஆளுநர் இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தனக்குக் கடிதம் எழுதினார். அதில் செந்தில் பாலாஜி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார் என்பதால் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்ற தனது பரிந்துரையை ஏற்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருந்ததார்.

இந்த கடிதம் கிடைத்ததும், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது தொடர்பான எனது பரிந்துரையை வலியுறுத்தி அன்றே பதில் அனுப்பினேன். அமைச்சர்கள் நியமன விவகாரத்தில் 164(1) பிரிவுக்கு முரணாகவும், எனது ஆலோசனைக்கு முரணாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி செயல்படுகிறார் என்பதையே இச்செயல்கள் காட்டுகின்றன.

இது ஒருபுறமிருக்க. முன்னதாக 31-5-2023 அன்று செந்தில் பாலாஜி மீதான கிரிமினல் நடவடிக்கைகள்  முடிவடையும் வரை அவரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குமாறு ஆளுநர் கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கு உடனே 1.6.2023 தேதியிட்ட ஒரு கடிதத்தை தான் எழுதினேன்.

அக்கடிதத்தில் சட்டப்படி ஒரு அமைச்சர் கைது செய்யப்படுகிறார். அல்லது ஒரு விசாரணை அமைப்பால் விசாரிக்கப்படுகிறார் என்பதற்காக அவர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் ஆகமாட்டார் என்பதை விரிவாக விளக்கியுள்ளேன்.

அந்த வகையில் (1) விசாரணையை எதிர்கொள்ளும் நபர் (2) குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் மற்றும் (3) நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்ட நபர் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை குறிப்பிட்டிருந்தேன்.

லில்லி தாமஸ் எதிர் இந்திய ஒன்றியம் (2013) பிரிவு 7, உட்பிரிவு 653 என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று சுட்டிக்காட்டினேன்.

ஒரு அமைச்சரை நியமிப்பது அல்லது நீக்குவது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பம். ஆளுநரின் இத்தகைய பரிந்துரை சட்டவிரோதமானது என்று தான் ஆளுநருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தேன்.

இந்தச் சூழ்நிலையில், அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில் 29.6.2023 அன்று இரவு 7:45 மணியளவில் ஆளுநர் ஒரு கடிதத்தை தனக்கு அனுப்பினார்,

அதில் இந்திய அரசியலமைப்பின் 154, 163 மற்றும் 164- ஆவது பிரிவுகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்குவதாக தெரிவித்தார்.

அந்தக் கடிதத்துக்குப் பதில் அளிப்பது தொடர்பாக தான் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அன்றிரவு 11:45 மணிக்கு, 29.6.2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதத்தை “நிறுத்திவைக்கும்” மற்றொரு கடிதம் ஆளுநரிடமிருந்து கிடைத்தது.

அந்த இரண்டாவது கடிதத்தில் இந்தியத் தலைமை வழக்கறிஞரின் கருத்தைப் பெறுமாறு உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஆளுநர் பதவியை அவர் சிறுமைப்படுத்தியுள்ளார்.

ஆளுநரின் 29-6-2023 தேதியிட்ட இந்த இரண்டு கடிதங்களுக்கும். தான் 30.6.2023 அன்று அனுப்பிய கடிதத்தில் சட்டப்பிரிவு 164 (1)-இன்கீழ், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் அமைச்சர்களை நியமிப்பார் மற்றும் நீக்குகிறார் என்றும், அந்த வகையில் அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் அல்லது யார் இடம்பெறக் கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதையும் மீண்டும் தான் வலியுறுத்தியிருந்தேன்,

29-6-2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதங்கள். அரசியலமைப்பிற்கு முரணானவை. செல்லாதவை மற்றும் சட்டத்திற்கு புறம்பானவை என்பதால் தான் அவற்றைப் புறக்கணித்தேன்.

ஆளுநர் என்பவர் அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி அரசியல் அல்லது எதிர்கால நியமனங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அற்றவராக இருக்க வேண்டும் என்ற தனது கருத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.

ஆளுநர் அலுவலகம் என்பது அரசியல் சார்பற்றதாகவும், ஆளுநர் தனது செயல்பாட்டிலும், பார்வையிலும், உண்மையாகவும் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும்.

ஒரு நல்ல ஆளுநர் தன்னைப் பற்றிய ஒரு உயர்வான கருத்தை அரசாங்கத்திற்குள்ளும், மாநில மக்கள் மத்தியிலும் உருவாக்க உதவ வேண்டும். அவர் மாநில மக்கள் மீதும் திறமையான நிர்வாகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். ஏதோ ஒரு கட்சி அல்லது கருத்தியலின் நலனை வளர்ப்பதற்காக ஆளுநர் செயல்படக் கூடாது.
அவர் மாநிலத்தின் நலனுக்காகத் தனது அரசியலமைப்புக் கடமைகளை அரசியலமைப்புக் குறிக்கோள்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

ஒன்றிய ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும்போது, மாநிலத் தலைநகரில் அமர்ந்துகொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் ஆளுநரை வெறும் ஒன்றியத்தின் முகவராகத்தான் கருதமுடியும்.

ஆளுநரின் இத்தகைய செயல் நமது கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து இழிவுபடுத்தி இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களையே அழித்துவிடும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் பாதுகாப்பதற்கும் தமிழ்நாட்டு மக்களின் சேவைக்கும், நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும். 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார் என்பது தெளிவாகிறது.

அவர் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்தும் அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்திவரும் ஆளுநர் ஆர்.என். ரவி, மறுபுறம் தனது அமைச்சர் ஒருவர் மீது வழக்கு விசாரணை தற்போதுதான் தொடங்கியுள்ள நிலையில் அவரை “டிஸ்மிஸ்” செய்ய அவசர கதியில் செயல்படுவதன் மூலம் தனது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்.என். ரவி தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் உயர்பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர்.

நமது இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் உணர்வையும், மாண்புகளையும் பாதுகாக்கும் வகையில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்புப் பதவியில் ஆர்.என். ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
பிரியா

ரசியாவில் நடந்தது சதிப்புரட்சியா? ஆயுதக் கிளர்ச்சியா? அதிகார மோதலா? 

“மாஜிக்கள் மீது வழக்குத் தொடர ஆளுநர் தாமதம்” : மு.க.ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *