தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக தமிழக அரசு தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 10-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில் அக்டோபர் 30-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
அதில், “தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறார். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜராகி ஆளுநருக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து நவம்பர் 10-ஆம் தேதி வழக்கின் விசாரணையை எடுத்து கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்தார். மேலும் அன்றைய தினம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வருகிறது.
அரசு நியமித்த பரிந்துரையின்படி துணைவேந்தர்களை நியமனம் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நவம்பர் 2-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வைரலான ராஷ்மிகாவின் போலி வீடியோ… மத்திய அமைச்சர் வார்னிங்!
கேரளா குண்டு வெடிப்பு: மார்ட்டினுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!