பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 10ஆம் தேதி சட்டப்பேரவையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்திருத்தங்களின் படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். முன்னதாக 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதாவானது ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆளுநர் ரவி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து மசோதாவானது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.