டிஜிட்டல் திண்ணை: ஆளுநர்-ரஜினி சந்திப்பு: மோடியின் மெசேஜ் என்ன?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் இந்தி நடிகர் அனுபம் கேர் தனது பக்கத்தில் ஆகஸ்டு 6 ஆம் தேதி பதிந்திருந்த குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஜினியோடு இருக்கும் படமும், இன்று ஆகஸ்டு 8 ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துவிட்டு அதன் பின் தன் வீட்டு வாசலில் செய்தியாளர்களை சந்தித்த வீடியோவும் வந்து விழுந்தன.

தலைசுற்றுவது போல ஒரு எமோஜியை ரியாக்‌ஷனாக அனுப்பிவிட்டு வாட்ஸ் அப் தன் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

”ஆளுநரோடு அரசியல் பற்றி விவாதித்தேன். அதைப் பற்றி ஊடகங்களிடம் சொல்லக் கூடாது என்று தெளிவாக சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால், அதே பேட்டியில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு இல்லை இல்லை என்றும் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார். அரசியலுக்கு  வரமாட்டார் ஆனால் அரசியல் பேசுவார் என்பதுதான் இந்த பேட்டியின் மூலம் அவர் சொல்லியிருக்கும் செய்தி.

இதைக் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.  ஆகஸ்டு 6 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றார் ரஜினிகாந்த். அங்கே பிரதமர் தலைமையில் ராஷ்டிரபதி பவனில் உள்ள கலாசார மையத்தில்  சுதந்திர அமிர்தப் பெருவிழா கொண்டாட்டங்களுக்கான தேசிய கமிட்டியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஏற்கனவே இரண்டு கூட்டங்களில் பங்கேற்காத மோடியின் பரம வைரியாக கருதப்பட்ட  மேற்கு வங்காள மம்தா பானர்ஜி முதன் முறையாக கலந்துகொண்டார். சுதந்திர அமிர்த பெருவிழா தேசிய கமிட்டியில் இருக்கும்  பெரும்பாலான உறுப்பினர்கள்  கலந்துகொண்டார்கள். அவர்களில் தமிழகத்தில் இருந்து ரஜினிகாந்த், எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோரும் உண்டு.

இந்த கூட்டத்துக்காக வந்த மோடி  அனைத்து உறுப்பினர்களையும் தேடிச் சென்று கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்தார். அந்த வகையில் ரஜினிகாந்தையும் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். கூட்டம் முடிந்த பிறகு மோடி தரப்பில் இருந்து ரஜினிக்கு ஒரு மெசேஜ் சொல்லப்பட்டிருக்கிறது.  சென்னை திரும்பியதும் உங்களுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரம் ஒதுக்கியிருக்கிறார் அவரை சென்று பாருங்கள் என்பதுதான் அந்த செய்தி.

நேற்று 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை திரும்பிய ரஜினிகாந்த், திங்கள் கிழமை காலை 11.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அவர் மட்டுமே சென்றார்.  சுமார் அரைமணி நேரம் அவர் ஆளுநர் ரவியோடு பேசியிருக்கிறார். அந்த சந்திப்பு முடிந்து வீடு திரும்பிய பிறகே ரஜினி, ‘ஆளுநரோடு அரைமணி நேரம் அரசியல் பேசினேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

என்னை மன்னித்து விடுங்கள் அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினி சொன்ன நிலையில், இப்போது ஆளுநரிடம் அரசியல் பேசியதாக சொல்லியிருக்கிறார். அடுத்த நிமிடமே நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஆக, அரசியலுக்கு வர மாட்டார் ஆனால் அரசியல் பேசுவார் என்பதுதான் ஆளுநர் மாளிகை சந்திப்புக்குப் பின்னரான ரஜினியின் நிலை.

ரஜினி அரசியலுக்கு வருவதில்லை என்று முடிவெடுத்தாலும்,  பாஜக தலைவர் நட்டா உள்ளிட்ட பிரமுகர்கள் ரஜினியோடு தொடர்ந்து தொடர்பில்தான் இருக்கிறார்கள்.  டெல்லியின்  மெசேஜ் மூலம் ஆளுநரை சந்தித்த ரஜினியிடம், ‘நீங்கள் கட்சி அரசியலுக்கு வருவதும் வராததும் உங்கள் விருப்பம்.

ஆனால் உங்களுக்கென்று ஒரு மகா சக்தி இருக்கிறது. அது தமிழகத்தோடு சுருங்கிவிடக் கூடியது அல்ல. வரும் 2024 தேர்தலில்  மோடிஜிக்கு உங்கள் ஆதரவு தேவை. ஆதரவு என்றால் தென்னிந்தியா முழுதும் உங்களுக்கென ஏற்பாடு செய்யப்படும் பிரத்யேக கூட்டங்களில் நீங்கள் மோடிஜியை  ஆதரித்துப் பேசலாம்.

கட்சி சாயம் எல்லாம் அதில் இருக்காது. ஒரு நல்லரசு மீண்டும் வரவேண்டும் என்பதன் அடிப்படையிலான கூட்டமாக அது அமையும். இதை நீங்கள் பரிசீலித்து சொல்லுங்கள்’ என்பதுதான் பாஜக மூலமாக ரஜினிக்கு சொல்லப்பட்டிருக்கும் செய்தி.

இதை தமிழக பாஜக பிரமுகர்கள் மூலம் சொன்னால் அது தவறாகிவிடும் என்பதால்தான், ரஜினிக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சொல்லப்பட்டுள்ளது. மேலும் வரும் சுதந்திர தின விழாவில் ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.,

தென்னிந்தியாவில் பாஜக வலிமை  மிகவும் குறைவாக இருப்பதாக தேசியத் தலைமை உறுதி செய்திருக்கிறது. பாஜகவை வலிமைப்படுத்துவதற்கான ஒவ்வொரு  சாத்தியக் கூறையும் செயல்படுத்துவதற்கு தீவிரமாக தயாராகிறது பாஜக தலைமை. அதில் ஒன்றுதான் தென்னிந்திய ஸ்டாரான ரஜினியை  மோடிக்காக பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது. இன்றைய ஆளுநர் மாளிகை சந்திப்பு வரை அதற்கு ரஜினி பதில் அளித்ததாக தகவல் இல்லை.

ஆனால் விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி சந்தித்தில் இருந்து ராஜ்பவனில் ஆளுநர் ரவி சந்தித்தது வரை நடந்தது இதுதான்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப். 

அரசியல் பேசினோம்: ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு ரஜினி

+1
0
+1
4
+1
2
+1
2
+1
7
+1
3
+1
2

1 thought on “டிஜிட்டல் திண்ணை: ஆளுநர்-ரஜினி சந்திப்பு: மோடியின் மெசேஜ் என்ன?

  1. இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன …?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *