வைஃபை ஆன் செய்ததும் தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற விசாரணையின் முழு விவரங்களும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு வழக்குகள் பிப்ரவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தன. Governor R.N Ravi vs CM M.K. Stalin
செயல்படாத ஆளுநர் ஆர்.என்.ரவி
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிதிவாலா, மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத் கி, அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜரானார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மிக நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார். மேலும் அரசின் முடிவுகளில் தலையிடும் வகையில் தனது கடமைகளை மீறுகிறார். எனவே அரசியல் சாசன சட்டம் 200 இன் படி செயல்படாத ஆளுநர் என அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி வாதாடினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில் ஆளுநரின் முடிவால் பெரும் தேக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் பல்கலைக்கழக பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அபிஷேக் மனு சிங்வி வாதாடினார்.
மீண்டும் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்
இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘ஆளுநர் எந்த அடிப்படையில் தனக்கு வரும் சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார்? இதுகுறித்து பிப்ரவரி 6ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது ஆளுநர் தரப்பில் பதில் சொல்ல வேண்டும்.
அதற்குள் தமிழ்நாடு ஆளுநர் தமிழக அரசு தரப்போடு பேச வேண்டும். இன்னும் 24 மணி நேரத்துக்கு மேல் இருக்கிறது. முதலமைச்சரோடு ஒரு தேநீர் அருந்தி இது பற்றி உரையாடுங்களேன்’ என்று அறிவுறுத்தி வழக்கை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்த நேரத்தில், ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லியில் தான் இருந்தார். கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் மத்திய அரசு அதிகாரிகளையும் தனது தனிப்பட்ட நண்பர்களையும் சந்தித்திருக்கிறார். Governor R.N Ravi vs CM M.K. Stalin
ஆளுநர், முதல்வர் ஆலோசனை!
இதே நேரம் முதலமைச்சர் ஸ்டாலினும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையை கவனித்துக் கொண்டிருந்தார்.
நீதிபதிகளின் அறிவுறுத்தலுக்கு பிறகு ஆளுநர், முதலமைச்சர் என இரு தரப்பிலும் ஆலோசனைகள் நடைபெற்றிருக்கின்றன.
ஆளுநர் தரப்பில் பிப்ரவரி 6 ஆம் தேதி வழக்கு விசாரணை வரும்போது உச்சநீதி மன்றத்திலேயே பதில் சொல்லலாமா என்றும், குடியரசு தின தேனீர் விருந்துக்கு அழைத்தும் முதல்வர் அதில் பங்கு பெறாததையும், ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியான திமுக நடத்திய போராட்டங்கள் பற்றியும் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம்… உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் படி ஆளுநர் நம்மை அழைத்தால் அதன் பிறகு பரிசீலிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.
முதலமைச்சரோடு அமர்ந்து ஒரு தேநீர் அருந்துங்கள் என்று உச்ச நீதிமன்றம் நேற்று பிப்ரவரி 4 ஆம் தேதி அறிவுறுத்திய நிலையில், அதன் பிறகு 24 மணி நேரம் டெல்லியில் இருந்து விட்டு பிப்ரவரி 5ஆம் தேதி மாலை தான் ஆளுநர் சென்னை திரும்பினார். முதலமைச்சர் ஸ்டாலின் பிப்ரவரி 6ஆம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்கிறார். Governor R.N Ravi vs CM M.K. Stalin
பிப்ரவரி 5ஆம் தேதி மாலை வரை முதலமைச்சரை தேநீர் விருந்துக்கு அழைப்பது பற்றி ஆளுநர் முடிவேதும் எடுக்கவில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.