வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் முகாமிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்த போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாடு ஆளுநர் இந்த வாரத் தொடக்கத்தில் டெல்லி சென்றார். ஜூலை 16 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்தார், ஜூலை 17 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதன் பின் தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சிறுபான்மை நலத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு உள்ளிட்டோரை சந்தித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநராக பல முறை டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி. ஆனால் இதற்கு முன் இல்லாத அளவுக்கு இப்போது தனது பயண அப்டேட்டுகளை ராஜ்பவன் தமிழ்நாடு சமூக தளம் வழியாக தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
அதில் தமிழ்நாட்டின் பாதுகாப்பு, மக்களின் அமைதி பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விவாதித்தாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். எடுத்த எடுப்பில் ஒரு மாநில ஆளுநர் என்ற அடிப்படையில் மத்திய உள் துறை அமைச்சரை சந்திக்கும்போது மாநில சட்டம் ஒழுங்கு பற்றி விவாதிப்பார்கள் என்பது நியாயம்தான். அதுவும் எதிர்க்கட்சியான திமுக ஆட்சி செய்யும் மாநிலத்தில், இன்னும் குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் ஆளுநரும் உள்துறை அமைச்சரும் நிச்சயம் இதுபற்றி பேசியிருக்கத்தான் செய்வார்கள்.
ஆனால் இதையும் தாண்டி இன்னொரு முக்கியமான மேட்டர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணத்தில் இருக்கிறது என்கிறார்கள் டெல்லி அதிகாரிகள் வட்டாரத்தில்.
அது என்னவென்றால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் வரும் ஜூலை 20 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில் தனது பதவிக் கால நீட்டிப்பு தொடர்பாகத்தான் டெல்லியில் முக்கிய சந்திப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தியிருக்கிறார்.
பொதுவாகவே ஆளுநர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். இந்த ஐந்து ஆண்டுகளில் குடியரசுத் தலைவரின் திருப்தி அதாவது மத்திய அரசின் திருப்தி இருந்தால் அவர்கள் பதவிக் காலம் முடிந்த பிறகு மீண்டும் அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும். அல்லது சொந்த விருப்பத்தின் பேரில் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம். இதுதான் அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அப்படிப் பார்த்தால் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் பற்றிய இரு வேறு தகவல்கள் உலவுகின்றன. இந்த குழப்பத்தால்தான் அவர் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.
அதாவது 2019 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி நாகாலாந்தில் ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி. ஆனால் இரு வருடங்களில் அங்கே அவருக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்ட அவர், 2021 செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்போது விவாதம் என்னவென்றால்… தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி மூன்று வருடங்களே பணியாற்றியிருந்தாலும், அவர் நாகாலந்து ஆளுநராக பதவியேற்று ஐந்து வருடங்கள் ஆகின்றன. எனவே ஆர்.என்.ரவியின் ஆளுநர் பதவிக் காலமான ஐந்து ஆண்டுகள் ஜூலை 20 ஆம் தேதியோடு முடிவடைகிறது என்பதுதான்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் தனக்கு இருக்கும் நட்பு அதிகாரிகள் மூலமாக அறிந்தார் ஆர்.என்.ரவி. நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து கணக்கிட்டு வரும் ஜூலை 20 ஆம் தேதி அவரது ஆளுநர் பதவிக் காலம் நிறைவடைகிறது என்பதை உள்துறை அமைச்சக நண்பர்கள் அவருக்கு உறுதிப்படுத்தினார்கள்.
இதற்கிடையில் கேரள ஆளுநராக இருக்கும் ஆரிஃப் முகமது கான் தனது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக அடிக்கடி சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருப்பதால்…தனக்கு தமிழ்நாடு ஆளுநர் பதவியை வழங்கிவிட்டு… ஆர்.என்.ரவியை கேரள ஆளுநராக மாற்றலாம் என்று மோடி, அமித் ஷாவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி திமுக அரசோடு மோதுவதை விட பல மடங்கு அதிகமாக கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான் அம்மாநில கம்யூனிஸ்டு அரசோடு மோதிக் கொண்டிருக்கிறார். எனவே கேரள ஆளுநரின் வேண்டுகோளுக்கும் அமித் ஷா முக்கியத்துவம் அளிக்கிறார்.
இந்த நிலையில்தான்….தமிழ்நாட்டிலேயே ஆளுநராக தொடரவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆர்.என்.ரவி டெல்லியில் முகாமிட்டு மோடி, அமித் ஷா ஆகியோரை சந்தித்துள்ளதாக டெல்லி வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை பற்றி குடியரசுத் தலைவருக்கு புகார்களை அடுக்கி ஏற்கனவே மனு அனுப்பியிருக்கிறார். அதேநேரம் அர்சியல் மேடைகளில், ‘ஆளுநர் ரவியை இங்கேயே வைத்திருங்கள். அவர் இப்படியே பேசிக் கொண்டிருந்தால்தான், எங்களால் தொடர் தேர்தல் வெற்றிகளை அடைய முடியும். திமுகவினரை எழுச்சியாக வைத்திருக்கிறார் ஆளுநர்’ என்றும் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கோரிக்கை ஏற்கப்படுமா, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கோரிக்கை ஏற்கப்படுமா என்பது டெல்லியின் கையில் இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
பீனிக்ஸ் பறவையாக 3வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்று சாதிப்பாரா பி.வி.சிந்து?
மகாராஜா படத்தை பாராட்டிய விஜய் : நிதிலன் நெகிழ்ச்சி ட்வீட்!