நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பது அரசாங்கத்தை கவிழ்க்க வழிவகுக்கும் என்பதில் ஆளுநர் விழிப்புடன் இருக்க வேண்டும். அலட்சியமாக இருக்க கூடாது என்று சிவசேனா வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 15) தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சொந்த கட்சியான சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதனால் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிஎஸ் கோஷியாரி உத்தரவிட்டார். தொடர்ந்து உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இது ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை பிடிக்க வழிவகுத்தது.
இந்தசூழலில் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது தொடர்பாக வழக்குகள் தொடுத்தது.
இதுதொடர்பான வழக்குகள் இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தபோது, உத்தவ் தாக்கரே தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.
அப்போது அவர், “ஒரு கட்சியின் கீழ் ஆட்சி இருக்கும் போது அதில் ஆளுநர் எப்படி தலையிடலாம்.
சிவசேனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அப்பட்டமான அரசியல் நடந்துள்ளது. மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியை திட்டமிட்டு வீழ்த்தினர்.
எந்த சட்டத்தின் கீழ் ஷிண்டேவை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அரசியலமைப்பு பிரிவு ஏ 168 இன் கீழ் ஆளுநர் சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் கிடையாது.
அவர் சட்டமன்றத்தில் ஒரு அங்கம் மட்டும்தான். அரசியல் கட்சியைத் தவிர வேறு யாரையும் அவரால் அங்கீகரிக்க முடியாது.
அதாவது ஒரு கட்சியைதான் ஆளுநர் அங்கீகரிக்க முடியுமே தவிர, ஆட்களை கிடையாது. பின்னர் அவர் ஆட்சி அமைக்க வாருங்கள் என ஏக்நாத் சிண்டேவுக்கு எப்படி அழைப்பு விடுத்தார்” என கேள்வி எழுப்பினார்.
ஷிண்டே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, “ஒரு கட்சியின் தலைவர் ஒரு தனி நபர் அல்ல. அவர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்.
எனவே, ஒரு கட்சி தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலுக்கு பிறகு எதிர்முகாமுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்கும் போது, கட்சிக்குள் அதிருப்தி ஏற்படுவது இயல்பு” என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு,
“மூன்று வருட கூட்டணிக்கு பிறகு ஏன் சித்தாந்த வேறுபாடுகள் எழுந்தன. மூன்று ஆண்டுகள் காங்கிரஸ் மற்றும் தேதியவாத காங்கிரஸுடன் ஆட்சியில் இருந்துவிட்டு, ஒரே இரவில் அதனை உடைக்க என்ன நடந்தது” என கேள்வி எழுப்பியது.
மேலும், ஆளுநர் குறித்து பேசிய தலைமை நீதிபதி, “நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும்.
அரசை கவிழ்ப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் ஆளுநர் ஈடுபடக்கூடாது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரியா
சாமோசா விற்று ஒரு நாளைக்கு ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி!
கல்வீச்சு தாக்குதல் : திமுகவில் இருந்து 4 நிர்வாகிகள் நீக்கம்!
