வைஃபை ஆன் செய்ததும் ஆளுநர் பேசிய வீடியோக்களும், ஆளுநருக்கு எதிராக அமைச்சர்களின் பிரஸ் மீட் வீடியோக்களும் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீடியாக்களில் மற்ற அரசியல்வாதிகளை விட பரபரப்பாக பேசப்படும் நபராக மாறியுள்ளார். குழந்தைத் திருமணம், இரட்டை விரல் சோதனை என்று ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆர்.என்.ரவி அதற்குப் பின் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ‘எனக்கும் குழந்தைத் திருமணம் நடைபெற்றது’ என்று பேசினார்.
லேட்டஸ்டாக ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் மாநில பாடத் திட்டம் தரமற்றதாக இருக்கிறது, அதை மேம்படுத்த வேண்டும் என்று சொன்னார். மேலும், முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் முடித்து வந்திருக்கும் நிலையில்… வெளிநாடுகளுக்கு சென்றுவந்தால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது என்று விமர்சித்தார்.
இவ்வாறு தொடர்ந்து திமுக அமைச்சர்களையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் கொதிப்பில் வைத்திருக்கிறார் ஆளுநர்.
இதையெல்லாம் தாண்டிய இன்னொரு கொதிப்பை ஏற்படுத்த ஆளுநர் மாளிகையில் சீரியசாக ஒரு ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் ஓர் அதிரடித் தகவல். அப்படி என்ன ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது ஆளுநர் மாளிகையில்?
கடந்த மே 21 ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மகளிரணி பிரமுகர்கள் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தனர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான போக்குவரத்துக் கழக வேலைக்கு லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் மத்திய குற்றப் பிரிவு போலீசார் இரண்டு மாதத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடித்தால் அவர் மீதான விசாரணை சுதந்திரமாக நடக்க வாய்ப்பில்லை.
அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், பதவிப் பிரமாணத்துக்கு எதிராகவும் செந்தில்பாலாஜியின் நடவடிக்கைகள் இருக்கின்றன. எனவே செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதலமைச்சருக்கு ஆளுநர் அறிவுறுத்த வேண்டும். இதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இதை ஆளுநரிடம் மனுவாகக் கொடுத்துள்ளோம்’ என்று செய்தியாளர்களிடம் பேசும்போது அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலை கொடுத்த இந்த மனுவின் அடிப்படையில்… தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புவது பற்றித்தான் ஆளுநர் மாளிகையில் தீவிரமாக ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது.
இதற்கு முன்னோட்டமாக ஏதாவது சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்று ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தேடினர். அதன் முடிவில் கடந்த 2022 ஆம் ஆண்டு கேரள மாநில ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்ததை அறிந்தனர்.
கேரள நிதியமைச்சர் பாலகோபால் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் பேசும்போது கேரள மாணவர்களையும் உத்திரப்பிரதேச மாணவர்களையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதைக் காரணம் காட்டி இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக அமைச்சர் பேசிவிட்டார். அதனால் அவர் மீது அரசியல் அமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதை முன்னுதாரணமாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கும் நிலையில், அவர் மீது அரசியலமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதலாமா என்பதுதான் ஆளுநர் மாளிகையில் நடந்திருக்கும் ஆலோசனை.
மாநில அரசின் அமைச்சரை நீக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரைக்க முடியுமா என்றும் சட்ட வல்லுநர்களின் கருத்துகளையும் கேட்டறிந்திருக்கிறார் ஆளுநர்,
கேரள ஆளுநர் இதுபோல எழுதிய கடிதத்துக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்,
‘நிதியமைச்சர் பாலகோபால் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவரது செயல்பாடுகளில் எனக்கு திருப்தி உள்ளது. அதனால் இத்தோடு இந்த விவகாரத்தை முடித்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’ என ஆளுநருக்கு பதில் கடிதம் எழுதினார்.
எனவே ஆளுநர் எழுதும் கடிதத்தால் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றாலும் கூட… அடுத்த அரசியல் பரபரப்பை கிளப்புவதற்கு ஆளுநர் மாளிகை தயாராகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.