’ஆளுநர் மாளிகை.. முதல்வர் இல்லமாக மாற வேண்டும்’: கண்டன பொதுக்கூட்டத்தில் கோரிக்கை!

அரசியல்

ஆளுநர் மாளிகை தமிழ்நாடு முதல்வர் இல்லமாக மாற்றப்பட வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளின் கண்டன பொதுக்கூட்டத்தில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காதது, ஸ்டெர்லைட் பிரச்சினை என தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநருக்கு எதிராக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஏப்ரல் 12ம் தேதி (இன்று) ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 10ம் தேதி ஒப்புதல் வழங்கினார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக, திமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் இன்று சைதாப்பேட்டை தேரடித் திடலில் நடைபெற்றது

இதில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி திருநாவுக்கரசரும், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., மதிமுக தலைவர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆர். ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி பேசுகையில், “நான் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டவன் என்று ஆளுநர் சொல்கிறார். ஆனால் அவருக்கு சம்பளம் கொடுப்பது தமிழ்நாட்டு மக்களும், அரசும் தான். அதை வாங்கிக்கொண்டு யார் யாருக்கோ வாரி கொடுக்கிறீர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது கடைசி கூட்டம் அல்ல. இதே போன்று ஆளுநருக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். ஏனெனில் தமிழ்நாடு அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு இன்னும் ஆளுநர் கையெழுத்து போடாமல் உள்ளார்.” என்றார்.

முதல்வர் இல்லமாக மாற்ற வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், ”தமிழக மக்களுக்கும், அரசுக்கும் உண்மையான விரோதி ஆளுநர் ரவி தான். அவர் தமிழக மாணவர்களின் வாழ்வுரிமையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் மாளிகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவருக்கு பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவிற்கு நாள் குறிக்க நேரமில்லை.

தமிழக அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் தமிழகத்தில் ஆளுநராக இருப்பதற்கு அருகதையற்றவர். 156 ஏக்கர் பரப்பளவுள்ள ஆளுநர் மாளிகை தமிழ்நாடு முதல்வர் இல்லமாக மாற்றப்பட வேண்டும். ஆளுநர் பதவி ஒழிப்பதற்கான நமது அறப்போராட்டம் தொடரவேண்டும்.” என்றார்.

இவரைத் தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் பேசி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா: செந்தில் பாலாஜி

ஆளுநர்களுக்கு கடிவாளம்: பாஜக அல்லாத முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *