Governor flood review meeting
தென் மாவட்டங்கள் மிகக் கடுமையான வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிசம்பர் 19) நடத்தும் போட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ள நிவாரணப் பணிகளிலும் அரசியல் செய்கிறாரா ஆளுநர் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. டெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சரும் இதுகுறித்து தனது ரியாக்ஷனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ஆளுநர் ரவி சென்னை ஆளுநர் மாளிகையில் டிசம்பர் 19 ஆம் தேதி ஓர் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
தென் மாவட்டங்களில் தற்போதைய வெள்ள பாதிப்புகள் நிலவரம் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் அமைப்புகள் மற்றும் ஆயுதப் படை அதிகாரிகளுடன் இந்த ஆலோசனையில் ஆளுநர் ஈடுபடுகிறார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட இந்த ஆலோசனையை ஆளுநர் நடத்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 19) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணப் பணிகள் பற்றியும் பாதிப்பு பற்றியும் விளக்கினார்.
இன்று இரவு பிரதமர் மோடியை சந்தித்து நிவாரணத் தொகை பற்றி வலியுறுத்திவிட்டு நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி செல்ல இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
ஆளுநர் இன்று நடத்தும் ஆலோசனைக் கூட்டம் பற்றி டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,
“கொரோனா போன்ற பேரிடரின்போது பிரதமர்தான் ஆலோசனைகளை, ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். அப்போது குடியரசுத் தலைவர் ஏதாவது செய்திருந்தால் என்ன ரியாக்ஷன்? அதே ரியாக்ஷன் தான் இப்போது” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னையை டிசம்பர் முதல் வாரம் புயல், வெள்ளம் தாக்கியபோதும் சரி… தென் மாவட்டங்களை கன மழை தாக்கியபோதும் சரி முதலில், “மத்திய மாநில அரசுகள் முழுமையான மீட்பு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. மாநில அரசின் அறிவுறுத்தல்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆளுநரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ என்ற பேச்சுகள் எழுந்த நிலையில் திடீரென ஆளுநர் இப்படி ஓர் போட்டி ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டி தன் ‘இயல்பு நிலைக்கு’ திரும்பியிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
கனமழையில் மக்களுக்காக உயிரை பணயம் வைத்த மீனவர்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி!
IPL2024: ஐபிஎல் ஏலத்தை நடத்தும் முதல் பெண்… சம்பளம் எவ்வளவுன்னு பாருங்க!
Governor flood review meeting