ஆளுநருக்கு எதிரான வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!

அரசியல்

ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுவையில் உள்ள ஆரோவில் பவுண்டேஷன் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1988 ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர் பதவி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 158 உட்பிரிவு 2இன் கீழ் ஆளுநர் எந்தவொரு லாபம் தரக்கூடிய நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மீறி அவர் தலைவராக உள்ளார்.

இதன் மூலம் அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக, ஆளுநராக அவர் பதவியேற்கும்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்படுகிறார். எனவே அவர் ஆளுநராக பதவி வகிக்க தகுதியற்றவர். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது என அரசியல் சாசனம் சட்டப் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

அது ஆளுநர் என்ற பதவியின் செயல்பாடுகள் தொடர்பானதுதான். தனிப்பட்ட முறையில் அவரது செயல்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடர முடியும்.

மேலும், ஆதாயம் தரும் பதவி வகிக்கும் ஆளுநர் ரவி, சட்ட விதிகளின்படி ஆளுநர் பதவியில் நீடிக்கிறாரா என விளக்கமளிக்க வேண்டும். சட்ட விதிகளுக்கு முரணாக பதவியில் நீடிப்பதாக இருந்தால் அவரை தகுதி நீக்கம் செய்யலாம்” என வாதிடப்பட்டது.

பல மாநிலங்களில் ஆளுநர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

ஜெ.பிரகாஷ்

கடுமையாக எச்சரித்த முதல்வர் : மன்னிப்பு கேட்ட அமைச்சர்

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐக்கு கூடுதல் அவகாசம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *