வார்த்தைகளை அடக்கி பேச வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். udayanidhi answer to tamilisai
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பதிக்கப்பட்டன. இதனால் தமிழ்நாடு அரசு ரூ.5060 கோடி ரூபாய் மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கேட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.450 கோடி மட்டுமே அறிவித்தது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் அடுத்தடுத்து சென்னை வந்து ஆய்வு செய்தனர்.
இதில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர், “அவர்கள் கேட்டதும் பணம் கொடுக்க இது என்ன ஏடிஎம் மா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி,
“நாங்கள் என்ன அவர்கள் அப்பா வீட்டு காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரிப் பணத்தைத் தானே கேட்கிறோம்” என்று கூறியிருந்தார்.
உதயநிதியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “இவர் கலைஞருடைய பேரனா? திட்டுவதாக இருந்தால் கூட கலைஞர் அழகு தமிழில் திட்டுவார்?
உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா என்று கேட்கிறார்? நீங்கள் எதில் ஆட்சி செய்கிறீர்கள்?. உங்கள் தாத்தா, அடுத்தது அப்பா, அடுத்தது நீங்கள் தான் வர வேண்டுமா என அவருடைய கட்சித் தொண்டர்கள் அவரை பார்த்துக் கேட்க வேண்டும்.
கலைஞர் உரிமை தொகை என்று பேர் வைத்திருக்கிறார்கள். அப்படியானால் கலைஞர் வீட்டிலிருந்தா எடுத்துக்கொடுக்கிறார்கள். உதயநிதி வார்த்தைகளை முதலில் அடக்கவில்லை என்றால் அவரை ஒரு எதிர்மறை தலைவராகத் தான் இந்தியா கூட்டணியும், திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்கொள்ளப் போகிறது’ என்று காட்டமாகப் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 15) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், நான் மரியாதைக் குறைவாக யாரையும் பேசவில்லை. வேண்டுமானால் மாற்றிச் சொல்கிறேன். மாண்புமிகு ஆளுநரின் அப்பாவுடைய சொத்தை கேட்கவில்லை, மாண்புமிகு ஒன்றிய அமைச்சரின் அப்பாவுடைய சொத்தை கேட்கவில்லை. தமிழ்நாடு மக்கள் கட்டக்கூடிய வரிப்பணத்தைத்தான் கேட்கிறோம்” என்று விமர்சித்தார்.
எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளை ஆய்வு கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மஹூவா மொய்த்ரா தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!
udayanidhi answer to tamilisai