சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசின் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்து, பாரதியார் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி தனது உரையை நிறைவு செய்தார்.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று(ஜனவரி 9)தொடங்கியது. திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழில் தன் உரையைத் தொடங்கிய ஆளுநர், சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.
பின்னர் அரசின் நலத்திட்டங்களை விளக்கி ஆளுநர் பேசினார். “போதைப் பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பான திட்டம். மேகதாது அணையைக் கட்டக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்க சர்வதேச நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் அறிவியல், கணித அறிவை மேம்படுத்த அரசு உறுதி எடுத்துள்ளது. நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது.
நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் நினைவு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
வளர்ந்த நாடுகளைப் போல தமிழ்நாட்டிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆவது தகவல் தொழில்நுட்ப பூங்கா மதுரையில் ரூ. 600 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

காலை உணவுத் திட்டத்தால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். பரந்தூரில் விமான நிலையம் அமைவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
புத்தொழில் திட்டத்தில் ரூ. 30 கோடியை பட்டியலின மக்களுக்கு ஒதுக்கியிருப்பது மிகச்சிறந்த முன்னெடுப்பு. பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
149 சமத்துவபுரங்களை புதுப்பிக்க ரூ. 190 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி போன்று பொருநை அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ. 15,000 கோடி செலவில் குடிநீர் வினியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாமல்லபுரம் அருகே துணைநகரம் உருவாக்கப்படும். 500 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும். பறவை, யானைகளுக்கு சரணாலயம் அமைத்து உயிரினங்களை அரசு பாதுகாத்து வருகிறது.
நாட்டிலேயே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை அரசு சிறப்பாக நடத்தியது. விளையாட்டுத்துறையை அரசு ஊக்குவித்து வருகிறது. நான் முதல்வன் திட்டம் கீழ் இதுவரை 3 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2,500 கிராமங்களில் அனைத்து கிராம வளர்ச்சிக்கான அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.20,900 கிலோ மீட்டர் நீள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன”.
இப்படி அரசின் திட்டங்களைக் கூறி பாராட்டி, காகிதம் இல்லாமல் கணிணியைப் பார்த்து வாசித்த ஆளுநர், வாழிய தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என்று கூறி தனது உரையை முடித்தார்.
கலை.ரா