ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.ரவிக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு 19 பக்கங்கள் கொண்ட கடிதத்தை இன்று (ஜூலை 9) அனுப்பியுள்ளார்.
அதில்,
சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம்
“தமிழ்நாடு சட்டமன்றம் பல முக்கியமான சட்டமுன்வடிவுகளை இயற்றி அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது.
இது மாநிலத்தின் நிருவாகத்தில் தலையிடுவதற்கும், சட்டமன்றத்தின் அலுவல்களில் தலையிடுவதற்கும் ஒப்பானதாகும். ஆளுநரின் இத்தகைய செயல், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்வதைத் தடுக்கிறது, இது அரசியலமைப்பிற்கு முரணானது. நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அமைச்சரவை அல்லது சட்டமன்றத்தின் முடிவின் மீது, ஒரு ஆளுநர் மேல்முறையீட்டு அதிகாரியாக இருக்க முடியாது. சட்டமுன்வடிவின் நோக்கக் காரணம், தேவை மற்றும் சட்டமுன்வடிவின் அவசியம் குறித்து ஆளுநர் விசாரிக்க முடியாது.
இது சட்டமுன்வடிவின் அவசியத்தை விரிவாக விவாதிக்கும் சட்டமன்றத்தின் முழு உரிமைக்கு உட்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டமுன்வடிவுகள் தொடர்பாக ஆளுநர் கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது.
சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டவுடன் அது மக்களின் விருப்பமாகக் கருதப்பட்டு, ஆளுநர் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும்.
சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு வகுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இப்படிப்பட்ட உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர தாமதம்
ஊழல் புரிந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட குட்கா வழக்கில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர சி.பி.ஐ. கோரிய அனுமதியைக்கூட வழங்காமல், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது விசித்திரமாக உள்ளது.
ஆளுநரின் ஒப்புதலுக்காக ஊழல் வழக்குகள் தொடர்பான பின்வரும் கோப்புகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பி.வி.ரமணா @ பி.வெங்கட்ரமணா முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் – கோப்பு எண் AC/495/2022, நாள் 12.9.2022.
டாக்டர் சி. விஜயபாஸ்கர் முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் – கோப்பு எண் AC/495/2022, நாள் 12.9.2022.
கே.சி.வீரமணி முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை – அமைச்சர் – கோப்பு எண் AC/454/2021. நாள் 12.9.2022
எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் – கோப்பு எண் AC/351/2021, நாள் 15.5.2023” என்று பட்டியலிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக செயல்படுதல்
ஆர்.என்.ரவி தனிப்பட்ட முறையில், தனது அரசியல் மற்றும் மதக் கருத்துகளைத் தொடர்ந்து பொது வெளியில் தெரிவித்து வருவது, அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றது.
ஒரு மாநில ஆளுநராக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட முயல்கிறார்.
அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழும் பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சொர்க்கம் போன்றது. மதச்சார்பற்ற கொள்கைகள் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் மாநில அரசு தனது முழு நம்பிக்கையை கொண்டுள்ளது. ஆனால் கெடுவாய்ப்பாக ஆர்.என். ரவி, இந்த நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி தனது பிளவுபடுத்தும் பேச்சுகளின் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார்.
ஆர்.என்.ரவி விரும்பத்தகாத பிளவுபடுத்தும் மத ரீதியான கருத்துக்களைப் பொதுவெளியில் பரப்பி வருவது அவரது ஆளுநர் பதவிக்குப் பொருத்தமற்றது.
கடந்த 9-11-2022 அன்று ஆர்.என். ரவி , “உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவும் ஒற்றை மதத்தைச் சார்ந்துள்ளது” என்று ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும்.
இந்தியா, அதன் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களைச் சார்ந்துள்ளது. எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதை இந்தியக் குடியரசுத் தலைவர் நன்கு அறிவார். இந்தியாவின் வலிமையும், அழகும், அதன் பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட சமூகத்திலும், பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட மத நல்லிணக்கத்திலும் உள்ளது.
கடந்த 13.06.2022 அன்று ஆர்.என்.ரவி, சனாதன தர்மத்தைப் புகழ்வது, தமிழ் இலக்கியத்தின் ரத்தினமான ‘திருக்குறளை’ வகுப்புவாதப்படுத்துவது, திராவிட பாரம்பரியத்தையும் தமிழ்ப் பெருமையையும் கண்டிப்பது போன்ற வகுப்புவாதக் கருத்துக்களை தெரிவித்திருப்பதாகவும், இதுபோன்ற தேவையற்ற அறிக்கைகள், பேச்சுக்களின் மூலமாக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் மக்களின் உணர்வையும் பெருமையையும் புண்படுத்தியுள்ளார்” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் எந்த தேர்தலிலும் ஆளுநர் ரவி போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர் அல்ல. அவர் ஒரு நியமன அதிகாரி என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “5.1.2023 அன்று நடந்த காசி தமிழ் சங்கமம் என்ற விழாவில் மீண்டும் தமிழ் மக்களையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும், திராவிடக் கருத்தியலையும், அரசியலையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும் அவை பின்வருமாறு செய்தித்தாளில் வெளிவந்தன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில், நாங்கள் திராவிடர்கள் எங்களுக்கும் இதற்கும் (பாரதம்) எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிற்போக்குத்தனமான அரசியல் நடந்து வருகிறது”.
“அதனால்தான் கூட்டாட்சி பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் இங்கே இருந்தது என்பதை உணரவில்லை”. அவர்கள்
• “மாகாணங்கள் என்ற கருத்தாக்கம் நிருவாக நோக்கங்களுக்காக உள்ளது, எனவே, நமது ஒன்றியம் அமெரிக்காவைப் போலன்றி இயற்கையானது கருத்தியல் சார்ந்தது அல்ல என்பதை நாம் உணர வேண்டும்”
• “இங்கே தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான கதையாடல் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுமைக்கும் பொருந்தும் அனைத்தையும் தமிழ்நாடு மட்டும், இல்லை. நாங்கள் உடன்படவில்லை’ என்று சொல்லும். இது ஒரு பழக்கமாகிவிட்டது, கல்விப்புலம் உட்பட அனைத்துத் தரப்பினராலும் இந்தப் பழக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது”.
“மிகவும் மோசமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளன. இது உடைக்கப்பட வேண்டும், உண்மை வெல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒன்று, பாரதத்தின் ஓர் அங்கம் என்பதே அந்த உண்மை”.
இவ்வாறு ஆளுநர் கூறியிருக்கிறார் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
பிரியா