வைஃபை ஆன் செய்ததும், சட்டமன்றத்தில் நடந்த சம்பவங்களை பற்றிய வீடியோக்களின் நோட்டிபிகேஷன்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ஜனவரி 9 ஆம் தேதியன்று சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் ஆளுநர் உரை, அதை ஒட்டி நடந்த சர்ச்சைகள் நாடறியும். மாநில அரசு தயாரித்து அளித்த உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதன் பின் சட்டமன்றத்தில் அதில் குறிப்பிட்ட சில வாசகங்களை சேர்த்தும், நீக்கியும் ஆளுநர் வாசித்தார்.
இதற்கு பதிலடியாக ஆளுநரின் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்த அடுத்த நொடியே முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து, ஆளுநர் விடுத்தும் சேர்த்தும் வாசித்த உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படியும்,
அச்சிடப்பட்ட ஆளுநர் உரையையும், சபாநாயகர் வாசித்த தமிழாக்க உரையை மட்டுமே அவைக்குறிப்பில் சேர்க்கும்படியும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இதுவரை நடைபெறாத இந்த சம்பவம் அரசியலில் மிகப்பெரும் விவாதமாக மாறியிருக்கிறது.
இந்த விவகாரம் பற்றி அன்று மாலையே ஆளுநரும், முதலமைச்சரும் தனித்தனியாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன் பின் அறிவாலயம் சென்ற ஸ்டாலின் அங்கே சீனியர் அமைச்சர்களுடன் இந்த விவகாரம் பற்றி ஆலோசித்திருக்கிறார்.
இதற்கிடையே திமுகவின் அமைச்சர்கள் பலர் இதுகுறித்து சீரியசாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி தன் உரையில் தவிர்த்த வாசகங்களின் அடிப்படையில்தான் இந்த விவாதம். அதாவது தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்ற வரிகளை ஆளுநர் தன் உரையில் தவிர்த்திருக்கிறார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பற்றி அவ்வப்போது ஆளுநர் கருத்து தெரிவித்தார். கோவை கார் குண்டுவெடிப்பு பற்றி கூட கோவையில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் பேசினார்.
அப்போது, ‘கோவை குண்டுவெடிப்பு என்பது பயங்கரவாதிகளின் தாக்குதல்தான். இந்த விவகாரத்தில் வழக்கை என்.ஐ.ஏ.விடம் கொடுக்க தாமதம் ஏற்பட்டது ஏன்? இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன’ என்று பகீர் புகாரை கூறினார்.
அதன் பின் டெல்லி சென்ற ஆளுநர் டெல்லி பயணத்துக்குப் பின் இதையே ட்விட்டாகவும் பதிவிட்டார். இந்த நிலையில் இப்போதைய ஆளுநர் உரையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்ற வாசகத்தை தவிர்த்துவிட்டார்
இதுபற்றித்தான் தொடர்ந்து விவாதித்தார்கள் அமைச்சர்கள். ஒரு ஜூனியர் அமைச்சர் சீனியர் அமைச்சரிடம், ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சீரியசான காரணங்களை அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து கட்டி எழுப்பி வருகிறார். அதற்கான இன்னொரு முக்கிய காய் நகர்த்தலாகத்தான் இந்த பத்தியை அவர் வாசிக்க மறுத்திருக்கிறார்.
இதன் மூலம் ஒரு வேளை பழையபடி சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆட்சியைக் கலைக்கப் போகிறார்களோ?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த சீனியர் அமைச்சர், ‘பிஜேபிகாரங்க இப்படி பேச ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா சுப்ரீம் கோர்ட்டின் பொம்மை ஜட்ஜ்மென்ட்டுக்குப் பிறகு அப்படியெல்லாம் பண்ண முடியாதுய்யா’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அந்த சீனியர் அமைச்சர்.
ஆனால் ஜூனியர் அமைச்சரோ, ‘என்னண்ணே…சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையெல்லாம் நாம பாத்துக்கிட்டுத்தானே இருக்கோம். இப்ப கூட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருத்தர் மோடி ஆட்சிக்கு வந்ததில இருந்து உச்ச நீதிமன்றம் தன் சுயத்தை இழந்துவிட்டதுனு பப்ளிக்கா சொல்லியிருக்காரு. என்ன வேணும்னாலும் நடக்கலாம்ணே ‘ என்று அவருக்கு பதில் சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது ஆளுநர் விவகாரத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சிலர் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லலாம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் திமுகவின் சீனியர் வழக்கறிஞர்களோ, ‘சட்டமன்றத்தில் ஆளுநர் வாசித்த உரையை முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தின் மூலம் அவைக் குறிப்பில் இருந்து நீக்கியாகிவிட்டது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கு நாம் சென்று என்ன கோரிக்கை வைக்க முடியும்? ஆளுநர் வாசித்ததை அவைக் குறிப்பில் இருந்து நீக்கியதை எதிர்த்து பாஜக தரப்பில் யாராவது நீதிமன்றம் சென்றால் அங்கே நமது வாதங்களை எடுத்து வைக்க முடியும். தவிர நாமாகவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார்கள்.
அதேநேரம் ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தை இத்தோடு விட்டுவிடக் கூடாது. அவர் அவையில் நடந்துகொண்ட விதம் அவை மரபுகளுக்கு மாறானது, மத்திய அரசுக்கு மாநில அரசுக்கும் மோதல் போக்கை ஏற்படுத்தும் தனிப்பட்ட திட்டத்தோடு அவர் நடந்துகொள்கிறார்,. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம் என்று முதலமைச்சர் நடத்திய ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டது,’
அதன்படியே ஜனவரி 10 ஆம் தேதி பிற்பகலே திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, மக்களவை கொறடா ஆ.ராசா உள்ளிட்டோர் டெல்லிக்கு புறப்பட்டனர். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிறார், அவரை திரும்பப் பெறக் கோரி திமுக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிக்க முயற்சித்தனர்.
ஆனால் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில்தான் அவர்களால் அந்த மனுவை கொடுக்க முடிந்தது. இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் அவை மரபை மீறிய ஆளுநர் மீதான புகார்களை குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக கூட்டணிக் கட்சிகள் அடுத்த முயற்சியைத் தொடர்ந்துள்ளன ” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
துணிவு வாரிசு ரிலீஸ்: ஆரவாரம் செய்த ரசிகர்கள்!
பொங்கல் பயணம்: உங்கள் ஊருக்குச் செல்ல… எந்த இடத்தில் ஏற வேண்டும்?