ஆளுநர் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Selvam

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையானது வரும் பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Governor case What happened

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில் தலையிடுவதாகவும் தமிழக அரசு தொடர்ந்த இரண்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கி அமர்வில் இன்று (பிப்ரவரி 7) விசாரணைக்கு வந்தது.

ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகி, “மசோதாக்கள் அனுப்பப்பட்ட இரண்டு மாதங்களில், தமிழக அரசுக்கு ஆளுநர் தனது முடிவை தெரிவித்துவிட்டார். தமிழக அரசு அனுப்பிய 12 மசோதாக்களில் 7 மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் பணிகள் என்பது அரசியலமைப்பு கூட்டாட்சி தத்துவத்தின் ஓர் அங்கம் ஆகும். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய அனைத்து மசோதாக்களும், புதிய மசோதாக்கள் அல்ல, சட்டத்திருத்த மசோதாக்களும் அடங்கும். அதனால், குடியரசு தலைவர் முடிவுக்காக ஆளுநர் நிறுத்தி வைக்கிறார்.

மசோதாவை குடியரசு தலைவருக்கு எதற்காக அனுப்புகிறேன் என்ற காரணத்தை நீண்ட விளக்கங்களுடன் ஆளுநர் கட்டுரையாக எழுத தேவையில்லை. சிறிய குறிப்பாக குடியரசு தலைவருக்கு அனுப்பினால் போதுமானது. அதாவது, மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்புகிறார் என்றாலே அது அவரது அதிகாரத்தில் இல்லை என்றே பொருளாகும்” என்றார்.

இதனையடுத்து நீதிபதிகள், “குடியரசு தலைவருக்கு ஆளுநர் மசோதாவை அனுப்பும்போது எதற்காக அனுப்புகிறார் என்ற காரணத்தை சொல்ல மாட்டீர்களா? என்ன குறிப்பை தெரிவித்து ஆளுநர் மசோதாவை அனுப்பினார்.

நாட்டின் குடியரசு தலைவர் அவராகவே தெரிந்துகொள்வாரா? அரசியல் சாசன பிரிவுகள் 200, 201-ஐ புறந்தள்ளிவிட்டு தான் ஆளுநர் செயல்படுவார் என்பது தான் உங்களது வாதமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். இந்த கேள்விகளுக்கு அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி பிப்ரவரி 10-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர். Governor case What happened

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share