திராவிட மாடல் ஆட்சியை அரசு வழங்குகிறது என்ற வரியையும், பெரியார், அண்ணா பெயர்களையும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டுமென்று தவிர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று(ஜனவர் 9) ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
சனாதன கொள்கைகளுக்கு ஆதரவாகவும், மாநில அரசுக்கு எதிராகவும் ஆளுநர் கருத்துகளை தெரிவித்து வருவதால் அவர் மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்த சூழலில் ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. ஆளுநர் அரசின் பல மசோதாக்களை கிடப்பில் போட்டு செயல்படவிடாமல் தடுத்து வருவதாக குற்றம் சாட்டின.
இந்த சூழலில் அரசின் திட்டங்களை விளக்கி அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசித்த ஆளுநர், திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்துள்ளார்.
உரையில் 65 ஆவதாக இருந்த சமூக நீதி, சுய மரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளது.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றி, பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது என்ற பத்தியை ஆளுநர் வாசிக்கவில்லை.
மேலும் அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்கவேண்டும் என்ற பத்தியையும் ஆளுநர் வாசிக்கவில்லை.
அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற வரியையும் ஆளுநர் வேண்டுமென்றே தவிர்த்திருப்பதாக கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
கலை.ரா
பாரதி வரிகளை கூறி உரையை முடித்த ஆளுநர்!
சட்டமன்ற கூட்டத்தொடர்: அருகருகே அமர்ந்த இபிஎஸ் ஓபிஎஸ்