ஆளுநரும் முதல்வரும் புதுக்காதலர்கள் போல் செயல்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று (அக்டோபர் 16) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “மழை வெள்ள பாதிப்பின் போது முதல்வர் ஒருபக்கமும், துணை முதல்வர் ஒருபக்கமும் போட்டோஷூட் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
3 மணி நேர மழைக்கே சென்னை தாங்கவில்லை என்று மக்கள் யூடியூப்களில் சொல்கிறார்கள். ஆனால் மீடியாவில் இந்த செய்திகள் வருவதில்லை.
மதுரையை பொறுத்தவரை 16செமீ மழைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். மழை நீர் வடிந்த பிறகுதான் மேயர் வந்து பார்க்கிறார். இங்கிருக்கக் கூடிய வணிக வரித்துறை அமைச்சர் அவர் தொகுதியை மட்டும் சென்று பார்க்கிறார்.
கமிஷன், கரெப்பஷனாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஆரம்ப நிலையிலேயே மதுரை தத்தளித்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
தமிழக அரசின் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆளுநர் பாராட்டியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “முதல்வரும் ஆளுநரும் புதுக்காதலர்கள் போல் இணக்கமாக இருக்கிறார்கள். புதுகதாநாயகனும், கதாநாயகியும் சந்தித்தால் எப்படி பேசுவார்களோ அப்படி இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.
ஆளுநர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்றார்கள். பின்னர் முதல்வர்,மூத்த அமைச்சர்கள் எல்லாம் விருந்துக்கு சென்றார்கள்.
முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்துவிட்டு வருகிறார். அவர்கள் தமிழ்நாட்டுக்கு 7000 கோடி மெட்ரோ பணிக்கு நிதி விடுவிக்கிறார்கள். ஆளுநர் மக்களுக்கு ஆதரவாக பேசிவந்தார். ஆனால் இன்று மாறியிருக்கிறார். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை” என்று விமர்சித்துள்ளார்.
நேற்று சேலம் மேச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் வெள்ள தடுப்பு பணிகளை பாராட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா