”ஆளுநரும் அண்ணாமலையும் மெண்டல்கள்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (நவம்பர் 25) பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நெல்லை மாநகர திமுக செயலாளர் சு.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அவர், “அறையில்கூட இருக்க முடியாத ஒரு கட்சிதான் பாஜக. நான் தலைவரிடம் சொல்லியுள்ளேன். அடுத்த முறை பாஜக ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தினால் இரண்டு நாட்கள் சென்ட்ரல் ஜெயிலில் வையுங்கள். அப்படி வைத்தால் அந்தக் கட்சியே இருக்காது.
ஒரு இரவு வைத்தால் போதும்; அவர்களுடைய உள்ளாடைகளை கழற்றிவிடுவர். ஆளுநருக்கு சம்பளம் தருவது நாம். ஆளுநர் டீ குடிப்பது முதல் அவர் வீட்டில் வேலை செய்யும் ஆட்களுக்கான சம்பளம் வரை நாம்தான் வரிப்பணம் கொடுக்கிறோம்.
நம்மிடம் வரிப்பணத்தை வாங்கி நம்முடைய செலவில் உட்கார்ந்து இருக்கும் ஆளுநர், ராஜ்பவனில் கூட்டம் நடத்தி திராவிடம் என்ற நாடே ஒன்று இல்லை என்கிறார்.
அவரும் ஐபிஎஸ் முடித்துவிட்டுத்தான் வந்துள்ளார். ஐபிஎஸ் படித்தவர்களில் பாதிப்பேர் இப்படித்தான் மெண்டலாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.
சாரி, எல்லா ஐபிஎஸ் அதிகாரிகளையும் நான் சொல்லவில்லை. வேலையை விட்டு அரசியலுக்கு வருகிற எல்லா ஐபிஎஸ் அதிகாரிகளும் மெண்டலாகத்தான் இருப்பார்கள்.
திமுக மோசமான கட்சி. இந்த கட்சிக்கு யாராவது துரோகம் செய்தால், ஒன்று கோர்ட்டுக்குப் போக வேண்டும்; இல்லையேல், கைகால் இல்லாமல் போக வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் எல்லோரும் பாஜகவினர்தான்.
எல்லா சமூக விரோதிகளும் அண்ணாமலை தலைவரான பின்பு, அக்கட்சியில் உறுப்பினர்களாகிவிட்டனர். எங்கள் தளபதியைப் பார்த்து பொம்மை முதல்வர் என்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இனிமேல், அவர் அப்படிப் பேசினார் என்றால், அவருக்கு வேறு வகையான பதில்தான் சொல்ல வேண்டியிருக்கும்” என்ற ஆர்.எஸ்.பாரதி எல்லோரையும் சகட்டுமேனிக்கு ஒருமையிலேயே பேசியிருந்தார்.
ஜெ.பிரகாஷ்
மெரினா பீச்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை நாளை திறப்பு!