பல்கலைக் கழகங்களுக்கு செலவு செய்வது மாநில அரசாக இருக்கும் போது வேந்தர் பதவியை மட்டும் ஆளுநருக்கு கொடுப்பதா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக சிவகங்கை சென்றுள்ளார்.
இன்று (ஜனவரி 21) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகம் மற்றும் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார். இந்த நூலகத்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 12 கோடி செலவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியாா் நினைவு கலையரங்க வளாகத்தில் அமைத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, அழகப்பரை குறிப்பிட்டு சொல்லும் போது சோசலிச முதலாளி என்று கூறுவார்.
இந்தியா விடுதலை பெற்றபோது, சென்னை பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த லட்சுமண சாமி முதலியார், அறியாமையில் இருந்து மக்களை விடுதலை அடைய செய்ய வேண்டுமென்றால் பின்தங்கிய பகுதிகளில் செல்வந்தர்கள் பல்கலைக் கழகங்களை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அந்த மேடையில் இருந்த வள்ளலார் அழகப்பா, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நான் தொடங்க தயார் என்று உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார்.
கல்வி தொண்டையும் தமிழ் தொண்டையும் சேர்த்து ஆற்றிய அழகப்பரால் தான் இன்று பலரும் பட்டங்கள் பெற்றுள்ளனர்” என்று புகழாராம் சூட்டினார்.
வள்ளுவர், வள்ளலாரை களவாட சதி!
மேலும் அவர், “குறள்நெறி பின்பற்றப்பட்டால்தான் தமிழ்நாடும், உலகமும் காப்பாற்றப்படும். அப்படி காப்பாற்றப்பட வேண்டுமானால், வள்ளுவரை யாரும் கபளிகரம் செய்யாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
வள்ளுவர், வள்ளலார் போன்ற, தமிழ் மண்ணில் சமத்துவத்தை பேசும் மாமனிதர்களை களவாட ஒரு கூட்டமே இன்றைக்கு சதி செய்துக்கொண்டிருக்கிறது.
அதற்கு எதிராக, காவலனாக ஒவ்வொரு தமிழரும் இருக்க வேண்டும்” என்றார்.
ப.சி.நடமாடும் நூலகம்
ப.சிதம்பரம் பற்றி பேசிய ஸ்டாலின், “ப.சி ஒரு நடமாடும் நூலகம். அரசியல், சட்டம், இலக்கியம், வரலாறு என எல்லாத் துறையிலும் அறிவுப்பூர்வமாக ஆழம் கொண்டவர். திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும் ப.சி என்ன சொல்கிறார் என்று கேட்பதற்கு நான் ஆர்வமாக இருப்பேன். அவருடைய பாராட்டு எனக்கு உற்சாகத்தை கொடுக்கும்” என்றார்.
கல்விக்கு முன்னுரிமை
மேலும் அவர், “கல்விக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். உயர்கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 32 அரசு மற்றும் கலை கல்லூரிகளை தொடங்கியிருக்கிறோம்.
நான் முதல்வன் திட்டம் மூலமாக 22.56 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்துள்ளோம். புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.” என மாணவர்களுக்கான அரசின் திட்டங்களை பட்டியலிட்டார்.
ஆளுநருக்கு மட்டும் பதவியா?
தொடர்ந்து, “பல்கலைக் கழகங்களின் நிர்வாகம் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்குவது மாநில அரசு. பல்கலைக் கழகங்களுக்கு உள் கட்டமைப்பு செய்து தருவது மாநில அரசு.
ஆனால் வேந்தர் பதவி மட்டும் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஒருவருக்கா என்பதுதான் எனது கேள்வி. மாநில கல்வி உரிமையை மீட்கும் பணியில் சட்டப்போராட்டமும் அரசியல் போராட்டங்களும் தொடரும்” என்று கூறினார்.