அரசு மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து விரிவான விசாரணை நடத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று (நவம்பர் 13) காலை பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுதுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டி மருத்துவமனைக்கு நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் – காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது.
இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா