சட்டமன்றக் கூட்டத் தொடரில் கடந்த 24 ஆம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்பு கொங்கு அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக நாமக்கல் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பல அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சாமிநாதன், “நாமக்கல் மாவட்ட ஜேடர்பாளையத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய அல்லாள இளைய நாயகர் பிறந்தநாளான தை 1 அரசு விழாவாக கொண்டாடப்படும்’ என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு கொங்கு பகுதியில் உள்ள வேட்டுவ கவுண்டர்கள் சமுதாயத்தினரை திமுக பக்கம் கவனம் குவிக்க வைத்திருக்கிறது.
ஏற்கனவே கொங்கு பகுதியில் கொங்கு வேளாளர்களின் அரசியல் ஆதிக்கமே மேலோங்கியிருப்பதாக பொதுவான ஒரு புகார் இருக்கிறது. கொங்குவேளாளர் தவிர பிற சமுதாயத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கும் வழி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக சமீபகாலமாக செயல்படத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் கொங்கு வட்டாரத்தில்.
இந்நிலையில் அமைச்சரின் அறிவிப்பு தங்களது பத்து ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று வரவேற்றிருக்கிறார் புதிய திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு சீர் மரபினர் நலவாரிய உறுப்பினருமான கே.எஸ்.ராஜ் கவுண்டர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஜூன் 25 மாலை இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராஜ் கவுண்டர்,
“நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி விவசாயத்தை பெருக்கியவர் வேட்டுவ கவுண்டர் சமூகத்தின் மாமன்னன் அல்லாள நாயகர். எங்களின் தொடர் கோரிக்கையால் ஜேடர்பாளையத்தில் அவரது திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலினால் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அல்லாள நாயகரின் பிறந்தநாளான தை 1ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டுமென்றும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்தோம். அண்மையில் புதிய திராவிட கழகத்தின் சமூக நீதி மாநில மாநாடு ஈரோட்டில் நடந்தபோது இதற்கானத் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு கோரிக்கை அளித்தோம்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மூலமாக இந்த கோரிக்கையை திமுக தலைமைக்கு தெரிவித்து அதன் பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாப்பிள்ளை சபரீசன், அமைச்சர் முத்துசாமி, அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரிடமும் தொடர்ந்து கொங்கு அரசியல் களத்தின் சூழலை விளக்கி வந்தோம்.
இந்த நிலையில் எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இதை அறிவித்துள்ளார். கொங்கு நாட்டின் ஆதிக் குடியான வேட்டுவ கவுண்டர் சமூகத்தினருக்கு இதனால் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வேட்டுவ கவுண்டர் சமுதாய வாக்குகள் கொங்கு மண்டலத்தில் பரவலாக இருக்கிறது. எனினும் எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் இல்லை என்ற பெருங்குறை நீண்ட நாட்களாக இருக்கிறது. எங்கள் மன்னருக்கு அரசு விழா என்ற தகவலின் மூலம் எங்கள் சமுதாயத்தினருக்கு அடுத்தடுத்த அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்றார் ராஜ் கவுண்டர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
திடீர் உடல்நலக்குறைவு: அத்வானி மருத்துவமனையில் அனுமதி!
ரஷீத்கானின் அந்த ஒரு தவறான முடிவு.. தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!
டாப் 10 நியூஸ் : அதிமுக போராட்டம் முதல் இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி போட்டி வரை!
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… பானையை வைத்து ’கேம்’ ஆடிய பாமக- ஷாக்கில் திமுக.,விசிக