காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 27) வழங்கினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், குமரி மங்கலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதியின் மகன் ஆவார்.
இவர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் குமரி அனந்தனிடம் வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருட்டிணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19ஆம் நாளன்று பிறந்தவர்.
பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர்-காங்கிரசுப் பேரியக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர், ஓவ்வறியாத உயரியத் தொண்டர் மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.
இலக்கியச் செல்வராகவும் மேடை மன்னராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் மிளிர்பவர் அன்பில் சிறந்த குமரி அனந்தன்.
நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும். ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் அரும் பணியாற்றியவர்.
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்து வரும் அவர், தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனடிப்படையில் அவரது கோரிக்கையினைக் கனிவுடன் ஏற்று, அண்ணாநகர் கோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி அதற்கான ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனிடம் வழங்கினார்.
ஜெ.பிரகாஷ்
ஆ.ராசாவின் நீலகிரி பயண திட்டம் ரத்து!
ஆம்னி பேருந்துகள் சேவை ஒன்றும் செய்யவில்லை: அமைச்சர் சிவசங்கர்