ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு இன்று (நவம்பர் 24) கடிதம் எழுதியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யவும், ஆன்லைன் கேமிங்கை ஒழுங்குபடுத்தவும், கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
இந்ந மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஒப்புதல் கிடைத்ததும் அவசர சட்டமாக அமல்படுத்தப்படும் என்ற நிலையில் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியானது.
அந்த தகவலை மறுத்த ஆளுநர், மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்க வில்லை என்று கூறினார்.
இதனைத் தொடந்து ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று தெரிவித்தார்.
மசோதாவின் காலம் வரும் 27 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ஆன்லைன் ரம்மி தடை மீதான அவசர சட்டம் குறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா