தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி 9) இதுவரை கண்டிராத காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.
மரபுப்படி புதிய ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தான் தொடங்கும். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இன்று உரையாற்றி அவையைத் தொடங்கி வைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆளுநர் உரை என்பது ஆளுநரால் வாசிக்கப்பட்டாலும் அரசியல் சட்டப்படி அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரைதான். அதாவது அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும். அவ்வளவே… அந்த வகையில் சட்டமன்றத்தில் ஆற்ற வேண்டிய உரையின் எழுத்துபூர்வமான வடிவத்தை தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.
இந்த நிலையில்தான் இன்று (ஜனவரி 9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்துக்குள் வந்தார். அவருக்கு முதல்வர் உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று வணங்கி வரவேற்பு அளித்தனர்.
ஆளுநர் உரையின் நகல் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநர் உரையாற்ற தயாரானார். தன் கோட்டுக்குள் இருந்து ஒரு பேப்பரை எடுத்தார் ஆளுநர்.
“மதிப்புக்குரிய முதல்வர் அவர்களே… மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களே…’ என்று தமிழில் பேச ஆரம்பித்தார். சட்டமன்றத்தில் எனது உரையை ஆற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று சில நிமிடங்கள் விடாப் பிடியாக தமிழை கஷ்டப்பட்டு உச்சரித்தார் ஆளுநர்.
பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்த பிறகு ஆங்கிலத்துக்குத் திரும்பினார். இதேநேரம் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக, தவாக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் ஆளுநரே வெளியேறு, ஆளுநரே வெளியேறு என்ற முழக்கங்களை எழுப்பினார்கள்.
ஆனாலும் ஆளுநர் தன் உரையை படித்துக் கொண்டே இருந்தார். சத்தம் போட்டுக் கொண்டிருந்த கூட்டணிக் கட்சி உறுப்பினர்களைப் பார்த்து உள்ளங்கையை ஆட்டி ஆட்டி வெளியே செல்லுமாறு சைகை காட்டிக் கொண்டிருந்தார் ஆளுநர் பக்கத்தில் அமர்ந்திருந்த சபாநாயகர்.
ஆளுநர் உரையின் நகல் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்த நிலையில்… ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல்வருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த மூத்த அமைச்சரான துரைமுருகன் முதல்வரைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கினார். அதற்கு, ‘இருங்க பார்க்கலாம்’ என்பதைப் போல முதல்வர் தலையாட்டினார்.
ஆளுநர் தன் உரையை வாசித்து முடிக்கப் போகும் நிலையில் மீண்டும் துரைமுருகன் முதல்வரைப் பார்த்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போதுதான் அவைக்குள் மெல்ல மெல்ல சலசலப்பு கிளம்பியது. முதல்வர் ஸ்டாலின் ஆளுநரையே உற்று நோக்கியவர் அப்படியே சபாநாயகரையும் பார்த்தார்.
சபாநாயகர் தனது அலுவலக ஊழியரை அழைத்து அவர் காதோடு காதாக தன் கையால் மறைத்தபடி ஏதோ கூறினார். இது அத்தனையும் ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது நடந்தது.
அதேநேரம் ஆளுநர் உரையாற்றி முடிக்கும்போது முதல்வர் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ. வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் தங்கள் கையில் வைத்திருந்த டேப் பை காட்டி, பேசிக் கொண்டனர். ஆளுநர் உரை முடிந்து சபாநாயகர் அதன் தமிழாக்கத்தை வாசிக்கத் தொடங்குவதற்குள்ளேயே… அமைச்சர்கள் துரைமுருகனும், நேருவும் முதல்வரின் அருகே சென்று ஏதோ பேசினார்கள்.
துரைமுருகனும், முதல்வரும் சில தாள்களை பரிமாறி ஆலோசித்தனர். பிறகு தனது இருக்கைக்குத் திரும்பிய துரைமுருகன் ’அப்பாடா…’ என்றபடி அமர்ந்துகொண்டார்.
சபாநாயகர் தமிழாக்க உரையை வாசித்துக் கொண்டிருக்கும்போதே சபாநாயகருக்கும், ஆளுநருக்கும் நடுநாயகமாக அவர்களை அடுத்து கோட் சூட் அணிந்து அமர்ந்துகொண்டிருந்த சட்டமன்ற செயலாளரை கையால் சைகை செய்து அழைத்தார் முதல்வர். உடனே செயலாளர் முதல்வர் அருகே சென்றார். முதல்வரின் ஊழியர்களும் அவர் அருகே சென்றனர்.
சபாநாயகர் தன் உரையை ஆற்றி முடித்ததும் அடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு முதல் நாள் சட்டமன்ற நிகழ்வுகள் முடிவதுதான் திட்டம். ஆனால் திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்தார்.
இன்று ஆளுநர் உரை என்பதால் முதல்வர் இருக்கைக்கு எதிரே மைக் இல்லை. ஆளுநருக்கும், சபாநாயகருக்கும் மட்டும்தான் இன்று மைக் வைக்கப்படும்.
மைக் இல்லாதபோதும் எழுந்த முதல்வர், ‘ஆளுநர் ஏற்கனவே ஒப்புதல் கொடுத்து அதன்படி அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் தவிர்த்தது வருத்தமளிக்கிறது’ என்று மைக் இல்லாமலேயே பேச ஆரம்பித்தார்.
ஆளுநர் உரை முடித்ததும் திடீரென முதல்வர் ஸ்டாலின் எழுந்து பேசுகிறாரே என்று சில நிமிடங்கள் கழித்து சுதாரித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி சடக்கென எழுந்து வெளியே சென்றார்.
அவரைத் தொடர்ந்து அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுதிமுவென சென்றனர். அவர்கள் பின்னால் ஓபிஎஸ் சும் வெளியேறினார்.
அதுவரை ஆளுநருக்கு ஏதும் தெரியவில்லை. சட்டென தனது செயலாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கூப்பிட்டு காதோடு காதாக என்ன ஏதென்று கேட்டார் ஆளுநர். பாதுகாப்பு அதிகாரி ஏதோ ஆளுநர் காதில் சொன்னார். அப்போது முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் உரை குறித்த தனது தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார்.
பாதுகாப்பு அதிகாரி தன் காதில் சொன்னதைக் கேட்டு முகம் சுருங்கிச் சிவந்த ஆளுநர் திடீரென எழுந்து மின்னல் வேகத்தில் சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். அதேநேரம் முதல்வர் ஸ்டாலின், ‘அச்சிடப்பட்ட ஆளுநர் உரை, சபாநாயகர் வாசித்த தமிழ் உரை ஆகியவை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
ஆளுநர் மின்னல் வேகத்தில் இறுகிய முகத்தோடு வெளியேறிய நிலையில், ‘வெல்க தமிழ்நாடு வெல்க திராவிடம்’ என்ற முழக்கங்கள் ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து ஒலித்தன.
-வேந்தன்