பொங்கல் திருநாளுக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகிப் பண்டிகை இன்று (ஜனவரி 14) கொண்டாடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என 3 நாட்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடவுள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் திருநாளுக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையைப் பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுக்கால கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம்.
இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கிப் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர்
ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் எனக் கூறுவது தான் சிறந்தது என்று பேசியிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் ஆளுநருக்கு எதிராகப் பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஜனவரி 12 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பொங்கல் விருந்து நடைபெற்றது. இந்த விருந்திற்கு அழைப்பு விடுத்த ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடாமல் தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனால் ஆளுநரின் பொங்கல் அழைப்பிதழும் சர்ச்சையானது. ஆளுநரின் பொங்கல் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை இன்று (ஜனவரி 14) வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
ராகுல் யாத்திரையில் எம்.பி. திடீர் மரணம்!
42 ஆயிரத்தைக் கடந்தும் உயரும் தங்கம் விலை!