ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநர் பல உயிர்களுடன் விளையாடுவதாக கூறி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இது ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வந்ததால் நேற்றுடன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா காலவதியாகிவிட்டது.
இதனால் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கனிமொழி
திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, “ஆளுநர் பதவியே காலாவதியான பதவி தான். அந்த பதவி இல்லையென்றால் இன்று ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும். ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை”.
அமைச்சர் ரகுபதி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம்.
சட்டம் காலாவதியாகிவிட்டதால் ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும்”.
அமைச்சர் பொன்முடி
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ஆளுநரை பார்க்க சட்டத்துறை அமைச்சர் அனுமதி கேட்டார். ஆனால் அதற்குக் கூட ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை.
மற்ற மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புகிறோம்”.
வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் “ஆளுநர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 காலாவதியாகி விட்டது.
எதிர்கால இளைஞர், மாணவர் சமுதாய நலனைக் கவனத்தில் கொள்ளாமல், ஆளுநரின் இத்தகைய போக்கு, அவர் ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வெறிக்குத் துணை போகிறாரோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது”.
டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ஆன்லைன் ரம்மி சட்டம் காலதாமதம் ஆகியது துரதிர்ஷ்டமானது. மாநில அரசின் சட்டத்தை ஆளுநர் காலம் தாழ்த்த கூடாது. இதை வரும் காலத்தில் பார்க்க வேண்டும்”.
மோனிஷா
யார் இந்த ருதுராஜ் கெய்க்வாட்?
திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல்: யார் யாருக்கு என்ன பொறுப்பு?