rn ravi is expired

”ஆளுநர் காலாவதியான மனிதர்”: வைகோ காட்டம்!

அரசியல்

காலாவதியான ஒருவர், திராவிட மாடல் காலாவதியாகிவிட்டதாகப் பேசுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுகவின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ, “எத்தனையோ ஏமாற்றங்கள், எத்தனையோ துரோகங்கள் என அனைத்தையும் கடந்து மதிமுக இன்றைக்கு வீறுநடை போடுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் மதிமுகவை லட்சக்கணக்கான தொண்டர்கள் கொண்டாடுகிறார்கள்.

மதிமுக இன்னும் எத்தனையோ வெற்றிகளைப் பெறும் என்ற நம்பிக்கையுடன் 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து, திராவிட மாடல் காலாவதியான ஒன்று ஆளுநர் கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “காலாவதியாகிப் போன ஒரு மனிதர். எங்கோ காவல்துறையில் ஓய்வு பெற்றுக் கொண்டிருக்க வேண்டிய மனிதர், இங்கு தமிழ்நாட்டில் வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி உளறலுக்கு மேல் உளறலாக திராவிட மாடல் காலாவதியானது என்று சொல்கிறார். மூன்று பெரிய தலைவர்கள் ‘நடேசனார், தியாகராயர், நாயர்’ ஆகிய மூவர் பதித்த இந்த செடி பெரிய விருச்சமாக வளர்ந்திருக்கிறது.

எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்திருக்கக் கூடிய இந்த வரலாறு தெரியாமல், ஆளுநர் உளறிக் கொண்டிருக்கிறார். அவர் ஆளுநர் பதவிக்கே தகுதியில்லை. ஆளுநர் மாளிகையில் அவர் இருப்பதற்கும் தகுதியில்லை.

அவர் பாஜக கட்சிக்கு ஒரு ஏஜெண்டாக இருக்கலாமே தவிர, இந்துத்துவ அமைப்புகளுக்கு ஒரு பிரதிநிதியாக இருக்கலாமே தவிர, ஆளுநர் பதவிக்கு ஆர்.என்.ரவி தகுதியற்றவர். இதுவரை இந்தியாவில் எந்த ஒரு ஆளுநரும் இப்படிப்பட்ட தவறுகளை செய்ததில்லை.

அப்படிப்பட்ட தவறுகளை ஒன்றன் மேல் ஒன்றாக செய்துக் கொண்டிருக்கக் கூடிய காலாவதியாகி போன ஆர்.என்.ரவி காலாவதியைப் பற்றிப் பேசுகிறார்” என்று ஆளுநரை கடுமையாக சாடினார்.

மேலும், திமுக ஆட்சி குறித்த கேள்விக்கு, “இதுவரை இருந்த ஆட்சிகளிலே இது உயர்ந்த சிறப்புகளைக் கொண்ட ஆட்சியாக, அனைத்து தரப்பு மக்களின் ஆவலைப் பூர்த்தி செய்கின்ற ஆட்சியாக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

தொடர்ந்து, மதிமுகவின் சொத்து கணக்கு மற்றும் வங்கி கணக்கை வெளியிட வேண்டும் என்று துரைசாமி கோரிக்கை வைத்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, “அவர் ஒன்றும் தெரியாமல் சொல்கிறார். ஆடிட்டர் பார்த்து ஆண்டுதோறும் வருமான வரித்துறைக்கு சென்று கணக்குகள் சமர்ப்பித்து முறையாக கட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் வேண்டுமென்றே கசப்பைக் கொட்டுகிறார்” என்று பதிலளித்தார்.

மோனிஷா

குலசாமி: விமர்சனம்!

கடவுளின் கோபம் தான் இயற்கை சீற்றத்துக்குக் காரணமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *