மதுரை வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்!

அரசியல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 2) நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

அமைச்சர் புறக்கணிப்பு

பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி,

”சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க கையெழுத்து போட ஆளுநர் மறுக்கிறார்.

வேந்தர் என்கிற அதிகாரத்தில் செயல்படுகிறார். பல்கலைக்கழக துணை வேந்தர் என்ற முறையில் நான் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

madurai kamaraj university convacation

கடந்த ஆண்டு மத்திய இணையமைச்சர் எல்.முருகனை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்புக் கொடி போராட்டம்

விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மதுரையில் இருந்து காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் செல்லும் போது நாகமலை – புதுக்கோட்டை பகுதியில் கருப்பு கொடி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.

சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பட்டமளிப்பு விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்களுக்கே அனுமதி அளிக்கப்படும்.

காலை 10.30 மணிக்குள் விழாவிற்கு வருகை தர வேண்டும். விழாவின் போது அணிவகுப்பினர் மன்றத்தினுள் நுழையும்போது அனைவரும் எழுந்து நின்று அணிவகுப்பினர் அமர்ந்த பின்னர் அமர வேண்டும்.

தொடர்ந்து நாட்டுப்பண் முடிந்து அணிவகுப்பினர் மன்றத்தில் இருந்து செல்லும் வரை எழுந்து நிற்க வேண்டும். பட்டமளிப்பு விழாவின் போது குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. விழா நிகழ்ச்சியில் செல்போனுக்கு அனுமதி கிடையாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

மொழிவாரி மாநிலங்களும் அம்பேத்கரின் எச்சரிக்கையும்!

வெற்றிமாறனை இயக்க ஆசை : லோகேஷ் கனகராஜ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *